“ஐரோப்பாவிலிருந்து குடி பெயர்ந்து இங்கே வருபவர்கள் பரவாயில்லை. கலாசாரத்தில் பெரிதாக மாற்றம் இல்லாதிருப்பதால் அவர்கள் இங்குள்ள சமூகத்தில் கலந்து விடுகிறார்கள். ஆனால் மற்ற நாடுகளிலிருந்து வருபர்கள் தான் பெரிய பிரச்சனை.”
காலையில் அலுவலகத்துக்கு கிளம்புகையில் பிபிஸியில் அந்த பெண்மனி பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது. ஏதோ பத்திரிக்கையின் உதவி ஆசிரியர் என்று அவர் பெயர் போட்டு கீழே எழுதியிருந்து. பெயரும் பத்திரிக்கையும் நினைவு இல்லை. கூட ஒரு கறுப்பர் இன நடுத்தர வயது ஆண். முதலில் இருந்து பார்க்காததால் அவரும் யார் என்று தெரியவில்லை.
அவர் ‘அப்படியெல்லாம் இல்லை. இங்கு புலம் பெயர்ந்து வரும் அனைவரும் இந்த சமூகத்தில் ஒரு பகுதி தான்’ என்று மறுக்க, ‘இல்லை எனக்கு தெரிந்து ஆப்பிர்க்காவில், ஆசியாவில் இருந்து வரும் பல குடும்பத்தில் இருந்து வரும் பலர் இன்னமும் தங்கள் பழக்க வழக்கத்தை விடாமல் தொடர்ந்து கடை பிடித்து வருவதால் அவர்களால இந்த சமூகத்துடன் ஒன்றிணைய முடியவில்லை’ என்று விடாது அடம் பிடித்தார் அந்த பெண்.
அவரது பார்வையில்
- புலம் பெயர்ந்து வருபவர்களின் கலாசாரத்தில் பெரிய வேறுபாடு இருந்தால் அது ஏற்றுக் கொள்ள முடியாது.
- பங்க்ளாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து வருபவர்களை விட இந்தியர்கள் விரைவாக மாறிக் கொள்கிறார்கள். அதனால் அவர்களாலும் அவர்கள் குழந்தைகளாலும் அதிகமாக சம்பாதிக்க முடிகிறது. அதன் மூலம் நாட்டின் முன்னேற்றத்துக்கும் உதவ முடிகிறது.
இன்னும் சில காரணங்களை அடுக்கிக் கொண்டு போனார். அவர் பேசியதில் சில விசயங்கள் இனவெறியாளரின் பேச்சு போன்று தோன்றவே நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் நெளிந்து கொண்டிருந்தனர்.
ஆனால் அந்த கறுப்பர் அழகா இரண்டு கேள்வி கேட்டார்.
- இங்கு வருபவர்கள் தங்கள் அடையாளங்களை அழித்து விட்டு உங்களுக்கு தகுந்தார் போல் மாற வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். இரண்டு மூன்று தலைமுறைகளாய் இங்கு வாழ்ந்தும் சில இனத்தவர் தங்கள் பழக்கவழக்கங்களை விடாது பிடிவாதமாய் கடைபிடித்து இங்குள்ளவர்களிடம் இருந்து தள்ளியே இருக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இரண்டு மூன்று நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்தும் ஆங்கிலேயர்கள் ஏன் ஆப்பிரிக்க பழக்கவழக்கங்களுக்கு மாறாமல் தங்கள் பழக்க வழக்கங்களை இன்னமும் கடை பிடிக்கின்றார்கள்?
- இந்தியர்கள் சமூகத்துக்கு அதிக பங்களிப்பதாக சொல்கிறீர்கள். இந்தியர்கள் என்றால் குஜராத்தியா? பஞ்சாபியா? மதராஸியா? எவரை சொல்கிறீர்கள்?
இதற்குள் செய்தியறிக்கைக்கு நேரமாகிவிட்டது என்று தொகுப்பாளர் இடை புகுந்து இவர்களின் பேச்சினை முடித்துக் கொண்டார்.
இந்த விவாதத்துக்கு காரணம் என்ன என்று பின்னர் தான் தெரிந்தது.
- கடந்த பத்தாண்டுகளில் நாட்டின் மக்கட்தொகை அதிகரிப்பில் பாதிக்கு மேலானவர்கள் வெளிநாட்டில் இருந்து புலம் பெயர்ந்திருப்பவர்கள்.
- இலண்டனில் இப்போது வசிப்பவர்களில் நான்கில் ஒருவர் வெளி நாட்டில் பிறந்தவர்.
சமன்பாட்டில் நிகழ்ந்து வரும் சில மாற்றங்கள் இங்குள்ளவர்களுக்கு கவலை அளிப்பது தெரிகிறது. அதிலும் சமீபத்திய தீவிரவாத தாக்குதலுக்கு பின்பு இந்த கவலை வலுப்பட்டிருக்கிறது.
கடந்த இரு மாதங்களாக ஊடகங்களில் வரும் பல செய்திகளும், அறிக்கைகளும், நிகழ்சிகளும் சில sensitiveஆன விசயங்களை நாசூக்காக தொட்டும் தொடாமலும் பேசி வருகிறது. இது வரைக்கும் தொலைக்காட்சிகளின் செயல்பாட்டினை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
இதுவரைக்கும் mainstream media பேசாமல் இருந்த பல விடயங்கள் இப்போ
து அலசத் தொடங்கியிருக்கிறது. இஸ்லாம் மதம் பற்றி கடந்த சில வாரங்களில் பார்த்த தொலக்காட்சி நிகழ்சிகளும் இதில் அடக்கம்.