வெள்ளி பதக்கம் வென்று இந்தியர்களை களிப்படைய செய்த மேஜர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோருக்கு வாழ்த்துகள் மற்றும் ஆயிரம் கோடி நன்றிகள். இந்தியாவின் மற்ற நம்பிக்கை நட்சத்திரங்கள் எவ்வளவு பிரகாசித்திருக்கிறார்கள் என்பதை பற்றிய ஒரு குறிப்பு இது.
ஹாக்கி வீரர்களிடையே கோஷ்டி பூசல்
நியூசிலாந்திற்கு எதிரான போட்டியின் போது பஞ்சாப் வீரர் ‘ககன் அஜித் சிங்’ பந்தை தனக்கு பாஸ் செய்யவில்லை என்று தனராஜ் சிங் கத்துகிறார். ஒலிம்பிக்ஸில் பங்கேற்கும் போது தனிப்பட்ட விரோதங்களை காட்டும் அளவிற்கு நம் வீரர்கள் ஒழுக்கம் கெட்டுப் போனார்களா?
ஆனாலும் ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து போட்டிகளில் நமது அணி போராடி தோற்றதாக தான் தோன்றுகிறது.
டென்னிஸ்
லியாண்டர்/பூபதி தனிப்பட்ட விரோதங்களை மறந்து நாட்டுக்காக மீண்டுமொருமுறை இனைந்தனர். அவர்கள்து விளையாட்டில் பழைய வசீகரத்தையும் வேகத்தையும் இன்னமும் காணமுடிகிறது. இந்த ஒலிம்பிஸில் இந்தியாவிற்கு இரண்டாவது பதக்கம் கிடைப்பதற்கான வாய்ப்பு இவர்கள் கையில் தான் இருந்தது. கால் இறுதி போட்டியில் போராடி தோற்றனர். கடைசி செட் மட்டுமே ஏறத்தாள 3 மணி நேரம் நீடித்தது.
‘லியாண்டர் பயஸும் மகேஷ் பூபதியும் பிரியாமலிருந்திருந்தால் இன்னமும் எவ்வளவோ சாதித்திருக்க முடியுமே’ என்ற எண்ணம் தோன்றியதை கட்டுப் படுத்த முடியவில்லை.
பளு தூக்குதல்
மல்லேஸ்வரி 2000 ஒலிம்பிக்ஸிற்கு பிறகு 2 ஆண்டுகள் எந்த விதமான பயிற்சியும் மேற்கொள்ளவில்லை. மே 2003’ல் தான் மீண்டும் பயிற்சியை துவக்கினாராம். அவரது யுக்ரேனிய பயிற்சியாளருக்கான சம்பளம் உட்பட மல்லேஸ்வரியின் பயிற்சிக்காக பல கோடிகள் செலவாகியிருக்கிறது. விளையாட்டுத் துறை அதிகாரிகள் அனைவருமே அவர் பதக்கம் வெல்ல முடியும் என்று நம்பவில்லையாம். அப்படியிருந்தும் கோடிக்கணக்கில் அவரது பயிற்சிக்கு செலவழித்திருக்கிறார்கள்.
ஆதன்ஸ் ஒலிம்பிஸிற்கு மல்லேஸ்வரியின் தேர்வு தகுதியின் அடிப்பிடையில் நேர்ந்ததில்லையாம். மே 2003இல் மல்லேஸ்வரி மீண்டும் விளையாடப் போவதாக அறிவித்தபின் அவரை ஒலிம்பிக்ஸிற்காக தேர்வு செய்யாவிட்டால், கடந்த ஒலிம்பிஸில் நாட்டுக்கு பெருமை தேடித்தந்த ஒரு வீராங்கனைக்கு அநீதி இழைக்கப்பட்டதாக பத்திரிக்கைகள்/அரசியல் வட்டாரங்களில் சலசலப்பு ஏற்படுமே என்பதற்காகவே அவருக்கு வாய்ப்பு கொடுத்ததாக சொல்கிறார்கள்.
இந்த செய்தி உண்மையாயிருப்பின், வெட்கக்கேடு.
போதை மருந்திற்கான சோதனையில் இரண்டு வீராங்கனைகள் தோல்வி (ப்ரதிமா குமாரி & Sanamacha Chanu). ஒலிம்பிஸில் இந்த முறை பல புதிய (கடினமான) சோதனைகள் செய்கிறார்கள். ‘தற்போது இந்தியாவில் இருக்கும் சோதனைக்கான வசதிகள் மிகவும் புராணமானவை. அதனால் தான் இந்த தவறு நேர்ந்துள்ளது’ என்கிறார்கள். எது எப்படியிருந்தாலும் இந்தியாவிற்கு இது ஒரு தலைகுனிவு.
அதலெடிக்ஸ்
அஞ்சு ஜியார்ஜ் தவிர வலுவான வீரர்கள் எவரும் களத்தில் இல்லை. பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.கிரிக்கெட்டிற்கு காட்டும் ஆர்வத்தில் நூறில் ஒரு பங்கு ஆர்வம் மற்று விளையாட்டுகளில் காட்டப்படுமேயானால், அடுத்த ஒலிம்பிக்ஸில் இந்திய தேசிய கீதம் ஒரு தடவைக்கு மேல் ஒலிப்பதை கேட்கலாமே.