Indians vulnerable to HIV/Aids

Indians vulnerable to HIV/Aids – BBC News

இது நாள் வரையில் நம்மவர்களுக்கு மேலை நாட்டவர்களை விட நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்று தான் நினைத்து வந்தேன். இன்னமும் நம்புகிறேன்.

எனது அலுவலக தோழி ஒருத்தி இந்தியாவினை பார்ப்பதற்கு தான் மிகவும் விரும்புவதாகவும் ஆனால் இந்தியாவிற்கு பயணம் செய்வதாயிருந்தால் அதற்கு முன் சில தடுப்பு ஊசிகள் போடவேண்டும் என்ற அச்சத்தினாலேயே இந்திய பயணத்தை ஒத்தி போட்டுக்கொண்டேயிருப்பதாக மாதத்திற்கு ஒரு முறையாவது புலம்புவாள்.

அப்போதேல்லாம் நான் “இந்தியர்களாகிய எங்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி மிக அதிகம். எந்த விதமான சூழ்நிலைக்கும் எங்களால் எளிதாக மாறிக்கொள்ள முடியும். உங்களைப் போல் எங்களுக்கு தேவையில்லாமல் தடுப்பூசிகள் தேவையில்லை” என்று சமாளிப்பது வழக்கம்.

All India Institute of Medical Sciences (AIIMS), HIV பரவுவதற்கு வழி செய்யும் ‘HLA-B*35-Px’ என்னும் மரபணு அதிகமாயிருப்பதாகவும் அதனை எதிர்த்து நிற்கும் ‘HLA-B*35-Py’ என்னும் மரபணு இந்தியர்களிடம் இரண்டரை மடங்கு குறைவாக இருப்பதாகவும் தனது ஆய்வுகளின் மூலம் கண்டறிந்திருப்பதாக அறிவித்துள்ளது. இது உண்மை என்றால் மேலை நாட்டவர்களை ஒப்பிடும் போது நம்மவர்களை எய்ட்ஸ் தாக்கும் அபாயம் மிக அதிகம் என்ற அதிர்ச்சியினை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மரபணு ஆராய்ச்சிகளை இன்னும் தீவிரமாக மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

இந்த செய்தியினை படித்ததும் தொடர்புடைய தளங்களில் தேடியதில் அகப்பட்ட சில புள்ளி விபரங்கள்.

இந்தியாவில் இது வரை கண்டறியப்பட்டுள்ள எய்ட்ஸ் நோயாளிகள்

இது வரை ஃபெப்ரவரி 2005 மாதத்தில் மட்டும்
ஆண்கள் 73,203 3,128
பெண்கள் 29,530 1,825
மொத்தம் 1,02,733 4,953

மாநில வாரியாக பார்த்தால் தமிழ்நாட்டுக்கு முதலிடம். ஏற்கெனவே சில வலைப்பதிவர்கள் இது பற்றி எழுதியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

மாநில வாரியான புள்ளி விபரம்

தமிழகத்தில் 48,180 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளி விபரம் தெரிவிக்கிறது. இதற்கு அடுத்த இடத்தில் மஹராஷ்ட்ரா மற்றும் ஆந்திரா ஆகியவை வருவதாய் தெரிகின்றது.

தமிழ்நாட்டிலிருந்து அதிக அளவிலான எய்ட்ஸ் பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டிருப்பதற்கு என்ன காரணம்?

* தமிழ் நாட்டில் வாழ்வோருக்கு எய்ட்ஸ் பற்றி விழிப்புணர்வு இல்லை
* எய்ட்ஸ் பற்றி அதிக விழிப்புடன் இருப்பதால் பாதிப்புகளை ஒழுங்காக பதிவு செய்து மருத்தவ உதவி செய்து வருகிறார்கள்
* தனி மனித ஒழுக்கம்?
* புள்ளி விபரங்களின் நம்பகத்தன்மை?

இரண்டாவது காரணம் தான் உணமையாக இருக்க வேண்டும் என்று என் மனது விரும்புகிறது. எது எப்படி இருந்தாலும் இந்தியர்களுக்கு எய்ட்ஸிற்கு எதிரான எதிர்ப்பு சக்தி குறைவு என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதற்காகவாவது எல்லோரும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்தால் சரி.

4 thoughts on “Indians vulnerable to HIV/Aids

  1. நல்ல பதிவு. நான் எழுதி வருவதற்கு உறுதுணையாக இருக்குமென்று நம்புகிறேன். தமிழகத்தில் விழிப்புணர்வு மட்டுமல்ல, இந்தியாவிலேயே, தமிழகத்தில் தான் முதல் முறையாக எய்ட்ஸ் பற்றிய தேடுதல் தொடங்கி, தெரிதல் வளர்ந்து இன்றைக்கு நாடெங்கிலும் பரவியிருக்கிறது. இந்தியாவில் எய்ட்ஸ் இருக்கிறது என்று முதலில் நிருபித்த திருமதி. சுனிதி சாலமனுடன் சில தன்னார்வ நிறுவனங்களோடு பழகியுள்ள அனுபவத்தில் கூறுகிறேன். புள்ளிவிவரங்கள் சரியாக இல்லாத காரணத்தினாலேயே தமிழ்நாட்டில் அதிகமாக இருப்பது போன்ற தோற்றமிருக்கிறது. ஆனால், நான் பழகிய வரையில் வட இந்தியா மிக மோசம். யாரேனும் HIV positive என்று தெரிந்தாலே அடுத்த முறை ஆலோசனைக்கு வரமாட்டார்கள், அல்லது ஒரு கிராமத்திலிருந்து இன்னொரு கிராமத்துக்கு மாறி விடுவார்கள். இவர்களை பின்தொடர்வது மிக கடினமான வேலை. நல்ல பதிவு. உங்களின் அனுமதியுடன் இந்த சுட்டிகளை என் பதிவிலும் பதிகிறேன்.

  2. நன்றி தங்கமணி மற்றும் நரேன், எனது விருப்பத்தை உறுதி செய்தமைக்கு.

    நரேன், இதற்கெல்லாம் அனுமதி கேட்க வேண்டுமா என்ன? :).

    Off-topic: இரண்டு மூன்று மாதங்களாக சில தனிப்பட்ட காரணங்களால் வலைப்பதிவுகள் பக்கம் அதிகமாக உலாவ முடியவில்லை. அவ்வப்போது வந்து ஒன்றிரண்டு பதிவுகளை படித்தது உண்டு என்ற போதிலும்….

    …நேரம் கிடைக்கும் போது ஒரு ரவுண்ட் அடிக்கிறேன்.

Comments are closed.