டிசெம்பர் 03, 1984

மறதி… சில நேரங்களில் மனிதனுக்கு கிடைத்த வரம். மீதி நேரங்களில் மனிதனின் தவறுகளுக்கு முழுக் காரணம். காலம் எப்போதும் நமக்கு பாடம் கற்பித்துக் கொடுத்துக் கொண்டேயிருக்கிறது. ஆனால் நாம் அவற்றை கவனிக்கிறோமா?

நேற்று பிபிஸி ஒளிபரப்பிய “One Night in Bhopal” பார்த்தேன். டாக்குமெண்டரியாகவும் இல்லாது ட்ராமாகவும் இல்லாது இரண்டையும் சரி விகிதத்தில் கலந்து படைத்திருந்தது எனக்கு புதிது.

போபால் விச வாயு சம்பவத்தை சின்ன வயதில் செய்தியாக கேட்டதும், படித்ததும் மறந்து பல நாட்கள் ஆகி விட்டது. நேற்று “One Night in Bhopal” பல பழைய விசயங்களை தொட்டுச் சென்றது.

போபாலில் வாழும் சில குடும்பங்களின் வாழ்க்கையுடன் இடையிடையே டாக்குமெண்டரியாக பல செய்திகளையும் வழங்கியுதுடன் பேரழிவிற்கு காரணமான அந்த இரவை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியது.

1970களில் – யூனியன் கார்பைடு நிறுவனம் போபாலில் பூச்சிக் கொள்ளி மருந்து தயாரிக்க ஒரு தொழிற்சாலையை துவங்குகின்றது. பொருளாதாரத்தில் பின் தங்கியிருந்த போபால் வாசிகளுக்கு பெரும் மகிழ்வு. பல புதிய வேலைகள் உருவாகுகின்றன. நகரத்தில் வேறெங்கும் கிடைக்கும் சம்பளத்தை விட கார்பைடு வழங்கும் சம்பளமும் அதிகம்.

கார்பைடு நிறுவனத்தின் நோக்கம் – விவசாய நாடான இந்தியாவில் தனது புதிய பூச்சிக் கொள்ளி மருந்துகளுக்கு பெரும் சந்தை இருக்கும்.

80களின் துவக்கம்

கும்கும் சக்ஸேனா’ (Kumkum Saxena) கம்பெனியில் மருத்துவ அதிகாரியாக சேர்கிறார்.

“எனக்கு இந்த வேலை கிடைத்ததை மிகப் பெரிய சாதனையாக நினைத்தேன். இதை விட வேறு பெருமையான விசயம் எனக்கு இருந்திருக்க முடியாது.” – கும்கும் சக்ஸேனா

தனது கடமையின் ஒரு பகுதியாக தொழிலாளர்கள் உபயோகிக்கும் வேதியல் பொருட்களை பற்றி ஆராய்ந்து ஓர் அறிக்கை தயாரிக்கிறார். அவரது கணிப்பில் தொழிற்சாலையில் புழங்கும் ஒரு கெமிக்கலான “MIC is volatile and fatal if inhaled.”

மெஹபூப் பீ (Mehboob Bhi). அவரது கணவர் சாந்த் கான் (Chand Khan) யூனியன் கார்பைடில் வேலை செய்கிறார் . சந்தோசமான குடும்பம். அழகான குழந்தைகள்.

சுமன் தே (Suman Dey). இளம் அறிவியல் பட்டதாரி. யூனியன் கார்பைடின் பாதுகாப்பு அம்சங்கள் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். ஆனால் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த அசுரனான MIC பற்றி அங்கே வேலை பார்த்த பலர் அறிந்திருக்கவில்லை.

Liquid Dyanamite என்று யூனியன் கார்பைட் விஞ்ஞானிகளால் சொல்லமாக அழைக்கப்படும் Methyl Isocyanate (MIC) – குளிரான நிலையில் பரம சாது. சூடானால் உயிர் கொல்லி. அசுரன். தன்னீருடன் கலந்தால் சூடேறும். பேரழிவு நிச்சயம்.

Hamidia Hospital, December 1981: முதல் பலி அஸ்ரஃப் கான் (Ashraf Khan).

தொழிற்சாலையில் ஒரு வாயுவை சுவாசித்த அஸ்ரஃப் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் படுகிறான். அஸ்ரஃப்பின் நெருங்கிய நண்பன் சாந்த் உடன் இருக்கிறான். அஸ்ரஃப் இறந்து விடுகிறான். தொழிற்சாலையின் பாதுகாப்பு அம்சங்கள் பற்றி கும்கும்மின் கவலை வலுக்கிறது.

அஸ்ரஃப்பின் மரனத்தை கேள்விப்பட்ட ‘சாந்த் கானின்’ மனைவி, வேலையை விட்டு விட சொல்கிறாள். ஆனால் குடும்பத்தின் பொருளாதரம் ‘சாந்த கானை’ அதே வேலையில் தொடரச் செய்கிறது. கும்கும் அஸரஃபின் மரனத்திற்கான காரனங்களை ஆராய்கிறார்.

ஆயிரக்கணக்கானோர் தொழிற்சாலையை சுற்றிப் புதிய குடியிருப்புகளில் வாழத் தொடங்கியிருந்தனர். தொழிற்சாலையில் உறங்கிக் கொண்டிருக்கும் அரக்கனை ஒருவருமே அறிந்திருக்கவில்லை.

9 வயது சஹீட் நூர், (Saheed Noor)அவனது அப்பா மொஹம்மத் கார்பைடு தொழிற்சாலையை நம்பி வாழ்ந்து வந்த வியாபாரி. பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் ஒரு நிறுவனமாகத் தான் அனைவரும் கார்பைடு பற்றி அறிந்திருந்தார்கள்.

தொழிற்சாலையை சுற்றி வாழும் ஜனங்களைப் பார்க்கும் கும்கும்மின் கவலைகள் அதிகரிக்கின்றன. ஏற்கெனவே ஓர் உயிர் பலியானதை பார்த்திருந்த கும்கும் சூப்பர்வைசரிடம் முறையிடுகிறார்.

“அமெரிக்கர்கள் தகுந்த பாதுகாப்பு முறைகள் வைத்திருக்கிறார்கள். ஆனால் இங்கே நம்மிடம் எதுவுமே இல்லை. ”

“ஆனால் அவர்கள் அமெரிக்கர்கள். நாம் இந்தியர்கள்.” அலட்சியமாக வருகிறது பதில்.

“ஆனால் இது மிக ஆபத்தான இடம். முன்னேற்பாடுகள் செய்தாக வேண்டும். குறைந்த பட்சம் விபத்து நேர்ந்தால் என்ன செய்யவேண்டும் என்றாவது வழிமுறைப் படுத்த வேண்டும்.”

“முயற்சிக்கிறேன். மேலதிகாரிகளுடன் விரைவில் இது சம்பந்தமாய் பேசுகிறேன். ஆனால் இப்போதைக்கு எந்த உறுதியும் அளிக்க இயலாது.”

இந்தப் பிரச்சனையை பெரிதாக்கினால் யூனியன் கார்பைடு தொழிற்சாலை நடப்பதற்கே ஆபத்து வரலாம். தொழிலாளர் பிரச்சனைகளையும் சந்திக்க இயலாமல் போய்விடும் என்ற பயத்தில் மேலதிகாரிகள் இதனை மூடி மறைக்கிறார்கள்.

கம்பெனி காது கொடுத்துக் கேட்காததால் மனம் வெறுத்து போகும் கும்கும் தனது வேலையை ராஜினாமா செய்கிறார்.

1984ஆம் ஆண்டு: கார்பைடு கம்பெனி பெரிய பிரச்சனையில் மூழ்கியிருந்தது. நாடு முழுவதும் பஞ்சம். கார்பைடு நிறுவனத்தின் பூச்சிக்கொள்ளி மருந்தான Sevinஐ வாங்குவதற்கு ஒருவரும் இல்லை. தொழிற்சாலையில் இருந்து அனுப்பிய பெட்டிகள் எல்லாம் விற்பனையாகமல் திரும்பி வருகின்றன.

போபால் கிளையை பற்றிய கம்பெனியின் கணவுகள் நாசமாகுகின்றன. பெரும் இலாபம் சம்பாதிக்கலாம் என்று தொடங்கிய கிளை, பெரு நஷ்டத்தில் வந்து நிற்கிறது.

மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்படுகின்றனர். நஷ்டத்தை ஈடு செய்வதற்காக. உற்பத்தி குறைக்கப் படுகிறது. அதோடு பாதுகாப்பு ஏற்பாடுகளிலும் பின்னடைவு ஏற்படுகிறது. பாதுகாப்பு சோதனைகள் நடப்பதும் குறைந்து போகிறது.

டிசெம்பர் 03, 1984

குழந்தைகளுக்கு கதை சொல்லி தூங்க வைத்து விட்டு சாந்த் கான் இரவு வேலைக்கு செல்கிறான்.

அன்றைய தினம் கண்ட்ரோல் ரூமில் சூப்பர்வைஸர் சுமன் தேவ். ஆட்களை குறைத்த பின் துனைக்கு ஒருவரும் இல்லாமல் தனியாளாக அன்றிரவு வேலை செய்கிறார்.

11:00 pm

வெளியே வழமையான பனிகள் நடக்கின்றன. ரேமன் கான் என்பவன் MIC storage tankஇனை இனைக்கும் குழாயினை சுத்தம் செய்கையில் தண்ணீரை பீச்சி அடிக்கிறான்.

டேங்கிற்குள் தண்ணீர் நழையாமல் காக்க வேண்டிய வால்வுகள் பொருத்தப் படவில்லை. அல்லது வேலை செய்யவில்லை. தண்ணீர் கசிந்து, டேங்கிற்குள் நுழைகிறது.

தண்ணீர் கலந்தவுடன் MIC சூடாகத் தொடங்குகிறது. இந்த டேங்க் பாதுகாப்பிற்காக குளிரூட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது செயல்படவில்லை. அன்றைய தினம் பாதுகாப்பில் நேர்ந்த நான்கு தவறுகளில் முதல் தவறு இது.

நகரில் இரவு வாழ்க்கை துவங்குகிறது. பரபரப்பு அடங்கிக்கொண்டிருக்கிறது.

11:30 pm

சுமனிற்கு தொலைபேசி வருகிறது. MIC டேங்க் அருகே ஒரு வித்தியாசமான வாடை. “உடனே அதை நாம் சோதனை செய்தாக வேண்டும்” என்கிறான் சுமந்த்.

டேங்கிலிருந்து வேக வைத்த முட்டைக்கோஸ் போன்ற வாடை. பிரச்சனையின் முதல் அறிகுறி.

குழிவினர் அதற்கான காரணத்தை தேடுகின்றனர்.

12:40 am

டேங்கிற்குள் 200 டிகிரிக்கு மேல் வெப்பம். விச வாய்வு வெளியேற வழி தேடிக்கொண்டிருக்கிறது. தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்று இன்னமும் தெரியவில்லை. குழுவினரால் அருகில் நிற்கவே முடியவிலை.

காஸ்டிக் சோடா. இந்த ரியாக்ஸனை அடக்கக் கூடியது என்று அறியப்பட்ட ஒரே வஸ்து. ஆனால் அது ஸ்டாக் இல்லை. பாதுகாப்பில் இரண்டாவது ஓட்டை.

சுமன் தே அறிவிப்பு செய்கிறான். “மிகப்பெரிய விபத்து. அனைவரும் தொழிற்சாலையை விட்டு வெளியேறுங்கள். உடனடடியாக அனைவரும் வெளியேறுங்கள். பெரிய விபத்து. அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செயல்படுத்துங்கள்.”

அபாயச் சங்கு ஒலிக்க துவங்குகிறது.

தூங்குகின்ற நகரத்தில் அபாயச் சங்கின் ஒலி கேட்கவிலை. அதற்குள் அதனை உடனடியாக நிறுத்தி விடுகிறார்கள். குழப்பத்தை தவிர்ப்பதற்காம். பாதுகாப்பில் மூன்றாவது தவறு.

சுமந்தை சுற்றி விஷ வாயு. சாகப்போவதாக நினைக்கிறான். ஆனால் அவனுக்கு அன்று அதிர்ஷ்டம். விஷ வாய்வு தாக்காத ஒரு வெற்றிடம் அவனக்கு கிடைக்கிறது.

நான்காவது பாதுகாப்பு ஏற்பாடு. வெளியேறும் வாய்வினை எரித்திருக்கலாம். ஆனால் அதற்கான ஏற்பாடும் வேலை செய்ய்வில்லை. பேரழிவினை இப்போது தவிர்க்க முடியாத நிலை.

‘விச வாயு’ நகரத்தை நோக்கி நகர்கிறது. காற்றை விட அடர்த்தியும் எடையும் நிறைந்திருந்ததால் அது தரையை விட்டு மேலே எழும்ப வில்லை.

சிறிது நேரத்திலேயே மக்களுக்கு மூச்சுத் தினறல், இருமல் ஏற்பட அனைவரும் பீதியில் என்ன ஏதென்று தெரியாமல் ஓடுகின்றனர்.

மெஹபூப்பால் ஓட முடியவில்லை. குழந்தைகளை வைத்துக் கொண்டு.

‘ஸ்வராஜ் பூரி’ நகர காவல் தலைவர். கார்பைடு நிறுவனத்தில் இருந்து இந்த விபத்து பற்றி யாருமே காவல்துறைக்கு தெரிவித்திருக்கவில்லை. தூங்கப் போகிறார். அப்போது வெளியில் குழப்பமும் சத்தமுமாக இருப்பதை பார்த்து வெளியே வந்து விசாரிக்கிறார். பீதியில் ஓடிக் கொண்டிருக்கும் கூட்டத்திடமும் பெரிய விசயம் கிடைக்கவில்லை.

“கூட்டத்தின் நடுவே ஒரு இளம் பெண்ணை பார்த்தேன். அவள் கையில் கைக்குழந்தை. அவள் கையில் இருந்து குழந்தை நழுவியது. ஓடிச்சென்று அந்தக் குழந்தையை எடுப்பதற்குள் குழந்தை நெரிசலில் சிக்கி இறந்து விட்டது.” – ஸ்வராஜ் பூரி

ஒருவருக்குமே என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்திருக்கவில்லை. வீட்டிற்குள் இருப்பதா அல்லது வெளியே ஓட வேண்டுமா என்று குழப்பம். ஆனால் அனைவரும் ஓடிவிடவே முயற்சித்தனர்.

இளம் சாகித்தின் சாஹித்தின் குடும்பம் இரண்டு முடிவையுமே எடுக்கின்றனர். அம்மா, தாத்தா, தம்பி, தங்கை நால்வரும் வீட்டிற்குள் இருக்க சாஹித்தும் அவனது தந்தையும் மட்டும் புகை வண்டி நிலையத்தை நோக்கி ஓடுகின்றனர். அங்கிருந்து தப்பித்து விடலாம் என்று திட்டம்.

1:30:

ஸ்வராஜ்ஜின் அலுவலகம். தொலைபேசி விடாமல் ஒலிக்கிறது. கேள்வி கேட்பவர்களுக்கு பதிலளிக்கஅவரிடம் எந்த பதிலும் இல்லை.

“வாயு வெளியாகியுள்ளது. அதைத் தவிர எங்களிடம் இப்போதைக்கு எந்த விபரமும் இல்லை.”

வாயுவை சுவாசித்தவர்கள் மூச்சு தினறல் ஏற்படுகிறது. வாந்தி எடுக்கின்றனர்.. நுரையீரலை நேரடியாக தாக்குகிறது. வயிற்று வலி. பல கர்ப்பினிகளின் கரு கலைகிறது. ஓடிக்கொண்டிருந்த குழந்தைகள் பலர் அங்கங்கே மயங்கி விழுகின்றனர்.

1:45

கும்கும். யூனியன் கார்பைடின் முன்னாள் மருத்துவ அதிகாரி. இந்த விச வாய்வு பற்றி ஓரளவுக்கு அறிந்திருந்த வெகு சிலரில் ஒருவர். அவருக்கு செய்தி கிடைக்கிறது.

“எங்கேயும் செல்லாதீர்கள். கதவுகளை சாத்திக் கொள்ளுங்கள். வெளியே செல்வதாயிருந்தால் காற்றடிக்கும் திசையை எதிர்த்து செல்லுங்கள்.”

என்று காவல் துறை மூலம் தெரிவிக்கிறார். அவரும் வீட்டின் ஜன்னலைகளையும் கதவுகளையும் சாத்திக் கொண்டு அன்றிரவு உள்ளேயேயிருக்கிறார்.

இந்த விசயம் முன்னமே தெரிந்திருந்தால் ஆயிரக்கனக்கான உயிர்களை காத்திருக்கலாம். ஆனால் அதற்குள் பீதியில் அனைவரும் வெளியே ஓடத் துவங்கிவிட்டனர். யூனியன் கார்பைடு நிறுவனமோ இந்த விசயங்களை வெளியே கடைசி வரை சொல்லியிருக்க வில்லை. விபத்து நேர்ந்த பின்னும் சொல்லவில்லை.

2:30

போபால் ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிகின்றன.

கார்பைடின் பொய்: “வெளியான வாயு வெறும் கண்ணெரிச்சல் மட்டுமே கொடுக்கும். பால், முட்டை, தண்ணீர், eye drops ஆகியவற்றை மருந்தாக உபயோகியுங்கள்.”

இது வரை கம்பெனி அது என்ன வாயு என்றோ, அதன் மூலக்கூறு என்னவென்றோ அதற்கு மாற்று மருந்து என்னவென்றோ ஒருவருக்கும் தெரிவிக்கவில்லை.

இதற்குள் பலர் இறந்திருக்கிறார்கள். மரணத்திற்கான காரணத்தை அறிவதற்காக மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்கிறார்கள். ஏதாவது மாற்று மருந்து கண்டு பிடிக்க முடியுமா? அனைத்து மரனத்திற்கும் காரணம் collapsed lungs.

3:00 மணி

இளம் சாகீத்தும் அவனது அப்பாவுடன் ட்ரெயின் ஸ்டேஷனுக்கு வந்து சேர்கிறார்கள்.ஆயிரக்கனக்கானோர் ஏற்கனவே அங்கே இருக்கிறார்கள்.

எந்த புகைவண்டியும் வரவில்லை. சில ட்ரக்குகள் ஆட்களை ஏற்றிக் கொண்டு ஊரிலிருந்து வெளியே கொண்டு விடத் தயாராயிருக்கின்றன. ஒரு ட்ரக்கில் அவர்கள் ஏறிக் கொள்கிறார்கள். தப்பித்து விட்டதாக நினைக்கிறார்கள். ஆனால்…

குழந்தைகளுடன் மெஹபூப் இன்னமும் தனித்து இருக்கிறார். புகையினூடு. இன்னமும் கணவரைக் காணவில்லை.

காலை 9 மணி :

வாயு வெளியேறுவது கடைசியாக அடங்குகிறது. கும்கும் வெளியே வருகிறார். பல நாட்களாக எது நடக்கக் கூடாது என்று அவர் பயந்திருந்தாரோ அது நடந்து விட்டது. நகரம் முழுவதும் பினங்கள்.

:-(

ஆஸ்பத்தரிகளில் இறந்தவர்களைக் கணக்கெடுக்கிறார்கள். பலரை கடைசி வரை அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை. சில குடும்பத்தில் அனைவருமே இறந்திருந்தனர். அதிகாரப்பூர்வ கணக்கின் படி 3000 பேர் இறந்தனர். ஆனால் 8000-1000 பேர் இறந்திருக்கலாம் என்று கூறுகின்றனர். 5,00,000 பாதிக்கப்பட்டனர்.

“அன்றைய இரவு என்னால் இன்னமும் மறக்க முடியாது. என்ன உலகம் இது… என்ன சமுதாயம். எதற்கு இந்த industrialisation” – ஸ்வராஜ் பூரி.

காலையில் சாந்த் கான் பாதுகாப்பாக வீடு சேர்கிறான். கணவர் நல்ல படியாய் திரும்பி வந்ததில் மெஹபூப்பிற்கு சந்தோசம். ஆனால் பாவம்… கைக்குழந்தை இறந்திருந்தை அவள் அறிந்திருக்கவில்லை. அதற்குள் மெஹபூபின் பார்வை சுத்தமாக பாதிப்படைந்திருக்கிறது.

உலகம் முழுவதும் செய்திகள் வெளியாகிறது. உலகின் மிகப் பெரிய industrial disaster. அமெரிக்காவில் யூனியன் கார்பைடு நிர்வாகிகள் அவசரமாக கூடுகின்றார்கள்.

இங்கே போபாலில் இன்னும் வாயு வெளியேறலாம் என்ற பீதியில் வீடுகளை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி போக மறுக்கிறார்கள்.

“நானும் உங்களுடன் வருகிறேன். இன்னும் ஏதாவது வாயு மிச்சமிருந்தால் நான் தான் இறக்கும் முதல் ஆளாக இருப்பேன்” என்று கூறி போலீஸ் தலைவர் ஸ்வராஜ் பூரி அவர்களை வழி நடத்தி செல்கிறார்.

“We at union carbide are saddened by the incident of our plant in Bhopal” என்று formalஆக ஒரு அறிவிப்பு யூனியன் கார்பைடு தலைமையிடமிருந்து.

இங்கே போபாலில் பினங்கள் ஊர்வலமாய்…

சஹீத் தனது பூர்வீக கிராமத்திற்கு போய் சேர்கிறான். போகும் வழியிலேயே அவனது தந்தையின் உடல்நிலை பாதிப்படைகிறது. அடுத்த நாள் ஊருக்கு திரும்பினால் அங்கே அவனது அம்மா இருந்திருக்கிறார். உடல் நலம் குன்றியிருந்த தந்தையும் அடுத்த சில மணி நேரங்களில் இறந்துவிடுகிறார்.

“வாழ்வேன் என்ற நம்பிக்கையே போய்விட்டது. ஒவ்வொருவராக இறந்து கொண்டிருந்தனர். அடுத்தது யார் என்ற் தெரியவில்லை” – சஹீத்

7 December 1984

யூனியன் கார்பைடு சேர்மேன் வார்ரன் ஆண்டர்சென் (Warren Abdersan) போபாலுக்கு வருகிறார்.

ஸ்வராஜ் பூரி அவரை வரவேற்க காத்திருக்கிறார்.

“ஆண்டர்சென் என்னிடம் என்ன நடந்தது என்று கேட்டார். உங்களுக்கல்லவா தெரிந்திருக்க வேண்டும் உங்கள் கம்பெனியில் என்ன நடந்தது என்றேன் நான். அதற்குப் பின் இருவரும் ஏதும் பேசவில்லை. இறுக்கமான அமைதி.” – ஸ்வராஜ் பூரி.

< << … இதன் தொடர்ச்சி … >>

5 thoughts on “டிசெம்பர் 03, 1984

  1. நவன் இதுக்கு நன்றி சொல்லலாமா இல்லையா என்று தெரியவில்லை.வாசிக்கும் போதே கண்முன்னால் கொடூரச் சம்பவம் படமாக விரிகின்றது.

  2. ஈழநாதன், நமது மக்களுக்கு ‘சங்கராச்சாரியார்’ அளவிற்கு இதெல்லாம் முக்கியமான செய்தியா தெரிவதில்லை.

    இன்னமும் இந்தியாவில் இது போன்ற (பாதுகாப்பு) குறைபாடுகளுடன் பல வேதியல் தொழிற்சாலைகள் (Chemial Plants) இயங்கி வருகின்றன. வருடந்தோறும் பல துவங்கப் படுகின்றன. ஆனால் இதையெல்லாம் யாரும் பெரிதாகக் கண்டுக் கொள்வதில்லை.

    எங்களுடைய இன்றைய பிரச்சனைகளே வேறு 🙁

  3. Pingback: தாமிரபரணித் தென்றல் » டிசெம்பர் 03, 1984 - தொடர்கிறது

  4. Pingback: தாமிரபரணித் தென்றல் » வலைப்பதிவராய் ஒரு வருடம்

  5. //நமது மக்களுக்கு ‘சங்கராச்சாரியார்’ அளவிற்கு இதெல்லாம் முக்கியமான செய்தியா தெரிவதில்லை. //

    இந்தியாவின் அவலமே இது தான்.

Comments are closed.