வலைப்பதிவராய் ஒரு வருடம்

இந்த வலைப்பதிவு ஆரம்பித்து ஒரு வருடம் முடிந்து இரண்டு நாட்களாகி விட்டது.

இந்த ஒரு வருடத்தில் 117 பதிவுகளும் அதற்கு 263 மறுமொழிகளும் இந்த வலைப்பதிவில் சேகரிக்கப்பட்டிருக்கிறது. அதே போல் 8 templates, 2 weblogging software என்று சில உபரி statisticsஉம் நினைவிற்கு வருகிறது.

இன்னொரு புறம் பார்த்தால் உருப்படியாக ஏதாவது செய்திருக்கிறேனா என்றால் ஓரிரு பதிவுகளை தவிர உருப்படியாக ஏதும் எழுதியதாக நினைவுக்கு வரவில்லை. இந்த ஒரு வருடத்தில் பள்ளி/கல்லூரி நாட்களில் படிக்காத தமிழினை கொஞ்சம் எழுதிப் பழகியிருக்கிறேன் என்பது மட்டும் கொஞ்சம் மகிழ்வாக இருக்கிறது.

அக்கம் பக்கம்

இந்த ஒரு வருடத்தில் வலைப்பதிவராய் நான் அவதானித்த சில விசயங்கள்:

– எழுத வேண்டும் என்ற ஆர்வம் பலருக்கு இருக்கிறது.
– பெரும்பாலானோருக்கு அதற்கான நேரம் கிடைப்பதில்லை
– அநேகமாக அனைவருக்கும் தங்கள் பதிவுகளுக்கு பின்னூட்டம் கிடைப்பதில்லை என்பதுடன் சமீப நாட்களில் தமிழ்மணத்தின் நட்சத்திரங்கள் மின்னுவதில்லை என்ற ஆதங்கமும் சேர்ந்திருக்கிறது.
– வலைப்பதிவு என்றால் நீண்ட கட்டுரைகளாக இருக்க வேண்டும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்
– சுட்டிகள் மட்டும் கொடுத்து பதியும் பதிவுகளை பலர் விரும்புவதில்லை.
வலைப்பூ என்னும் சஞ்சிகையின் இழப்பை உணர முடிகிறது. வெகு நாட்களாக வலைப்பதிவர்களுக்கு ஒரு பொதுவான மன்றமாக அனைவரும் கண்ணியத்துடன் தினசரி கூடி பேசுவதற்கான ஒரு இடமாக இருந்த வலைப்பூவினை என்னால் வெகு சீக்கிரத்தில் மறக்க முடியாது. தெரிந்தோ தெரியாமலோ அதன் கடைசி வாரத்தினை தொகுத்து வழங்கியவன் என்ற முறையில் எனக்கு லேசான ஒரு உறுத்தல் இன்னமும் இருந்து வருகிறது.
– கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பிறரை காயப்படுத்த சிலர் தயங்குவதில்லை. உணர்ச்சி வயப்படுதல் எவருக்கும் எளிதாம். ஆனால் அதே நேரத்தில் பிறரை புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளை எடுத்துரைப்பதற்கு நாம் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டால் நன்றாயிருக்கும்.
– இணையம் என்பது சுதந்திரமான ஒரு ஊடகமாக இருந்தாலும் “Your freedom ends where my nose begins” என்பதையும் நாம் ஒரு நொடி சிந்திப்போமேயானால் அனைவருக்கு நல்லது.
தமிழ்மணம் என்ற ஒரு வலைவாசல் தமிழ் வலைப்பதிவுகளுக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம். ஆனால் நம்மில் பலருக்கு வலைப்பதிவுகள் செயல்படும் விதத்தினை தமிழ்மணம் மறக்கடித்து விட்டதோ என்ற ஐயம் அவ்வப்போது என்னுள் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.
தனிமனித தாக்குதலை தவிர்ப்பது அனைவரின் இரத்த அழுத்ததையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவும்.
இந்த வார நட்சத்திரம் செயல்படும் விதம் பற்றி – நட்சத்திரங்களின் மீது ஏற்கெனவே ஒளி வட்டம் விழுந்திருப்பதால் அவர்கள் அந்த வட்டத்திற்குள் இருக்கும் நாட்களில் நாளுக்கு ஒரு வலைப்பதிவினையாவது பற்றி எழுதுதல் நலம். உதாரணமாக ‘மூக்கு’ சுந்தர் செய்தது போல் தங்கள் மீது விழுந்திருக்கும் ஒளியினை கொஞ்சம் அன்றைய தினம்/வாரம் தாங்கள் வாசித்த சுவாரசியமான/நல்ல வலைப்பதிவுகளின் பக்கமும் திருப்பி விட்டார்களானால் புதிய வலைப்பதிவர்களுக்கு தேவையான உத்வேகம் கிடைக்கும்.
– சிலர் வலைப்பதிவுகளில் கோஷ்டி அமைத்துக் கொண்டிருப்பதாக கருதுகிறார்கள். என்னால் உடன் பட முடியவில்லை. அப்படியே இருந்தாலும் அதில் தவறேதும் இருப்பதாகவும் தோன்றவில்லை. நல்ல பதிவுகளை வாசிக்கவும், அதற்கு பின்னூடமிடவும், ஆதரவு தெரிவிக்கவும், அதனை பற்றி பிற இடங்களில் பேசவும் பலர் இருக்கிறார்கள். அதே போல் இரு வலைப்பதிவர்களுக்கிடையே நட்பு மலருமேயானால், நண்பரின் வலைப்பதிவினை தினசரி படிப்பதும் அதில் பின்னூட்டமிடுவதும் இன்றியமையாத ஒன்று. அதற்காக அவர் பதிவில் பின்னூட்டமிடுபவர் என் பதிவில் ஏன் பின்னூட்டம் இடுவதில்லை என்பது – இதற்கு ஒரு ஒப்புமை சொல்லத் தோன்றுகிறது. ஆனால் வேண்டாம் என்று விட்டு விடுகிறேன்.
– வாரத்திற்கு ஒரு முறையாவது பிளாக்ஸ்பாட் எனது பதிவினை விழுங்கி விட்டது என்ற எவராவது ஒரு வலைப்பதிவர் புலம்பும் போது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். ஆனாலும் நான் பிளாக்ஸ்பாட் உபயோகித்ததில்லை என்பதால் அதனை பற்றி ஏதும் தெரியவில்லை. பிளாக்கர் இந்த பிரச்சனைக்கு கூடிய சீக்கிரம் ஒரு தீர்வு காணும் என்று நம்புகிறேன்.
– இன்றைய தேதிக்கு பிளாக்கருக்கு அடுத்த படியாக பெரும்பாலோர் உபயோகிப்பது WordPress (வொர்ட்பிரஸ்) என்னும் மென்பொருளினை. இன்றைக்கு WordPress மிகப் பிரபலமாக இருப்பது போல தோன்றினாலும் (இதற்கு முன்பு Moveable Typeஉம் நியுக்கிளியஸும் இந்த இடத்தில் இருந்தது), தமிழில் அமைந்த முதல் வலைப்பதிவு WordPress கொண்டே துவங்கப்பட்டது என்பது கொஞ்சம் சுவராசியமான விசயம்.
உருப்படியாக எழுதுவதற்கு பலர் இங்கே இருக்கிறார்கள் என்பது நம்பிக்கையளிக்கிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் அங்கங்கே சில குறைபாடுகள் தெரிந்தாலும் நம்பிக்கையின் கீற்றுகளை பல திசைகளில் இருந்தும் காண முடிகிறது.

போக வேண்டிய தூரம்

தமிழ் வலைப்பதிவுகளுடன் நான் போக வேண்டிய தூரம் இன்னும் அதிகம் இருக்கிறது. அதற்கான நேரமும் சூழ்நிலையும் அமையுமானால் ஏதாவது உருப்படியாக செய்ய முயல்கிறேன்.

இந்த ஒரு வருடத்தில் நான் எழுதியவற்றில் எனக்கு ஆத்ம திருப்தி அளித்த பதிவு என்றால் போபால் பேரழிவினை பற்றிய எனது இரு பதிவுகளை குறிப்படலாம்.

டிசெம்பர் 03, 1984
டிசெம்பர் 03, 1984, தொடர்கிறது

நன்றிகள்:

– முதல் பின்னூட்டமிட்ட ‘ரவியா’விற்கு
– அவ்வப்போது இங்கு வந்து பின்னூட்டமிடும் சக வலைப்பதிவர்களுக்கும் நண்பர்களுக்கும்.
– தமிழிலும் வலைப்பதிவுகள் இருக்கின்றன என்று நான் தெரிந்து கொள்ள காரணமாயிருந்த இன்னொரு நவனுக்கு.
– ‘தமிழ்மணம்’ காசி, அதன் பிற நிர்வாகிகள், மதி கந்தசாமி மற்றும் தமிழில் வலைப்பதிபவர்களுக்கு ஏற்ற தளம் அமைக்க பாடு படும் அனைவருக்கும்
– வலைப்பதிவு விக்கியினை நிர்வகித்து வரும் வெங்கட் மற்றும் வாசகர்கள்/வலைப்பதிவர்களுக்கு தொழில் நுட்ப ஆலோசனை/உதவி செய்தி வரும் அனைவருக்கும்
– WordPress மற்றும் Nucleus மென்பொருட்கள், மற்றும் அதன் சொருகு நிரல்களுளை உருவாக்கி வரும் என்னிலடங்கா தன்னார்வ உள்ளங்களுக்கு
– விரைவில் என்னை துணையாக ஏற்றுக் கொள்ளவிருக்கும் என்னவளுக்கு

27 thoughts on “வலைப்பதிவராய் ஒரு வருடம்

  1. வாழ்த்துக்கள் நவன்.

    >>கோஷ்டி… அப்படியே இருந்தாலும் அதில் தவறேதும் இருப்பதாகவும் தோன்றவில்லை >>

    இந்தக் கருத்தோடு முழுமையாக உடன்படுகிறேன்.

    >>விரைவில் என்னை துணையாக ஏற்றுக் கொள்ளவிருக்கும் என்னவளுக்கு >>

    அட! அப்படிப் போடுங்க! இனிய வாழ்க்கைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  2. //263 மறுமொழிகளும் இந்த வலைப்பதிவில் சேகரிக்கப்பட்டிருக்கிறது//
    பொழுது போகாத பொம்முவாட்டம் இதை எண்ணிக்கிட்டு இருந்தீங்களாக்கும்?! அது சரி..! வாழ்த்துக்கள் & அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

  3. வலைப்பதிவு தொடங்கி ஒரு வருடம் நிறைவதற்கு வாழ்த்துகள் நவன்!

    விரைவில் கால்கட்டு போட இருப்பதற்கும் வாழ்த்துகள்! கலக்குங்க.

    -மதி

  4. நன்றி செல்வா, துளசி. மாயவரத்தான், மதி.

    //பொழுது போகாத பொம்முவாட்டம் இதை எண்ணிக்கிட்டு இருந்தீங்களாக்கும்?!//

    ஐய்யோ மாயவரத்தான் :).

    இதையெல்லாம் யாராவது எண்ணிட்டு இருப்பாங்களா. WordPress கொடுக்கிற statisticsமா. இந்த படத்தை பாருங்க. இல்லைன்னா databaseல ஒரு query கேட்டா சொல்லப் போகுது.

  5. உளநிறை நல்வாழ்த்துகள் நவன்.

    அக்கம்பக்கத்தில்

    தமிழில் எழுத ஒரே வாய்ப்பு சிலருக்கு என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்!

  6. வாழ்த்துக்கள் நவன்.

    இந்தப் புள்ளி விபரங்களெல்லாம் சேகரிக்க ஏதாவது shortcut இருக்கிறதா அல்லது

    மாயவரத்தான் சொன்னமாதிரி
    //பொழுது போகாத பொம்முவாட்டம் இதை எண்ணிக்கிட்டு இருந்தீங்களாக்கும்?!//

    //தமிழிலும் வலைப்பதிவுகள் இருக்கின்றன என்று நான் தெரிந்து கொள்ள காரணமாயிருந்த இன்னொரு நவனுக்கு //
    அப்போ அந்த முதல் நவன் நீங்கள் இல்லையா?

  7. sorry நவன்
    refresh செய்யாம மறுமொழிந்ததில் உங்க பதிலை கவனிக்கவில்லை

  8. //தனிமனித தாக்குதலை தவிர்ப்பது அனைவரின் இரத்த அழுத்ததையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவும்.//

    உண்மையான, அனைவரும் உணரவேண்டிய கருத்து, உங்கள் திருமணத்திற்கு வாழ்த்துக்கள்

  9. Congrats Navan…
    Wish you a great and successful blogging experience and Marriage life!

    Love,Arun Vaidyanathan

  10. சம்சார சாகரத்தில் என்னைப்போல நீங்களும் தொபுக்கட்டீர் என குதிக்கப் போகிறீர்கள்! முன் வாழ்த்துக்கள் நவன்!

    என்னைப் பொறுத்தவரையில் பின்னூட்டம்தான் ஒருவரை இன்னும் எழுதத் தூண்டுகிறது என்பேன்! அதனாலேயே நான் மறவாமல் பின்னூட்டுகிறேன்!

  11. வாழ்த்துக்கள் நவன்.

    இந்த வாழ்த்துக்காகமட்டும் தகவல்சொல்லாமல், நிறைய விஷயங்கள் எழுதியிருக்கிறீர்கள். மிகுந்தநன்றி.

    அதானெ…
    அந்த முதல் நவனுக்கும் பாராட்டுக்கள்…

    >>>>
    வலைப்பூ என்னும் சஞ்சிகையின் இழப்பை உணர முடிகிறது.
    >>>>
    கண்டிப்பாக இன்னும் உணரமுடிகிறது…

    >>>>
    தெரிந்தோ தெரியாமலோ அதன் கடைசி வாரத்தினை தொகுத்து வழங்கியவன் என்ற முறையில் எனக்கு லேசான ஒரு உறுத்தல் இன்னமும் இருந்து வருகிறது.
    >>>>
    இன்னும் சங்கொலி- கேக்குதா:)

  12. நவன் – வாழ்த்துக்கள்.

    >இந்த ஒரு வருடத்தில் 117 பதிவுகளும் அதற்கு 263 மறுமொழிகளும் இந்த வலைப்பதிவில் சேகரிக்கப்பட்டிருக்கிறது. அதே போல் 8 templates, 2 weblogging software என்று சில உபரி statisticsஉம் நினைவிற்கு வருகிறது

    மே 15, 2006 – சென்ற வருடம் 117 பதிவுகளை எழுதினேன். இந்த வருடம் 18 பதிவுகள்தான் முடிந்தது. ஆனால் சென்ற வருடம் அவ்வளவு எழுதி 263 கருத்துக்கள்தான் வந்தன. இந்த வருடம் 18 பதிவுகளுக்கு 76 கருத்துக்கள் (யோவ் – அதுல 54 வாழ்த்துக்கள்-ங்கறதயும் சொல்லுய்யா). 🙂

    கிண்டல் ஒருபுறமிருக்க நிசமாகவே வாழ்த்துக்கள், நவன்.

  13. வாழ்த்துக்கள் நவின் !! அதற்குள் 1 வருடமாகிவிட்டதா?
    /தமிழிலும் வலைப்பதிவுகள் இருக்கின்றன என்று நான் தெரிந்து கொள்ள காரணமாயிருந்த இன்னொரு நவனுக்கு.
    //
    நானும் யூ.ஸ் நவன் என்றே நினைத்து முதல் முறையாக வந்தது நினைவிருக்கிறது!! தொடருங்கள்…

  14. //இந்த ஒரு வருடத்தில் 117 பதிவுகளும் அதற்கு 263 மறுமொழிகளும் இந்த வலைப்பதிவில் சேகரிக்கப்பட்டிருக்கிறது. அதே போல் 8 templates, 2 weblogging software என்று சில உபரி statisticsஉம் நினைவிற்கு வருகிறது
    //

    விஜயகாந் படம் பிடிக்குமா? :))

  15. வாழ்த்துகள் நவன்… ரஜினி ஸ்டைலில் ;-))

    Music India OnLine – Chandramukhi (2005)

    F : Valthurean valthurean varum pengalukku valthurean
    Ponna petha thayare potharama keturenga
    Mapillaya pethavaga manam mangalama keturunga
    Sunnambu pola suvicha mugathukka enga sooriyanar Vamusam
    Enganga vaachucho
    Vethila pola sericha mugathukkae santhiranaar vamsam Engange vahucho

    Annanoda blogguu

    M: Are are are are are

Comments are closed.