IRC (Internet Relay Chat) எனபது இணைய வழி அரட்டைக்கு பயன்படும் தொழில்நுட்பம். திறமூல மென்பொருட்கள் உருவாக்கும் குழுக்கள் பல இந்த IRCயினை சிறப்பான முறையில் பயன்படுத்தி வருகிறார்கள். நிரலாளர்கள் ஒருவருடன் மற்றொருவர் உடனடியாக தொடர்பு கொள்வதற்கும் பயனர்கள் தங்களது சந்தேகங்களை தீர்த்துக் கொள்வதற்கும் IRCஐ உபயோகப்படுத்துகிறார்கள்.
யாஹூ/MSN தூதுவன் (messenger) மூலமாக அரட்டை (chat) அடிப்பதற்கும் IRCக்கும் ஒரு மெல்லிய நூலிழை தான் வித்தியாசம். ஒரு குறிப்பிட்ட தலைப்பில் IRC ஓடையினை (IRC Channel) துவங்கி விட்டால் அதன் பின் ஒரு குழுவின் விவாதங்கள் மற்றும் கருத்துப் பரிமாற்றங்களை அந்த IRC ஓடையின் வழியாகவே நிகழ்த்தலாம்.
குறிப்பிட்ட தலைப்பின் கீழ் கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்வதால் இதுவும் ஒரு வகையில் இணைய குழுமங்கள் (Internet groups) போன்றது தான். ஆனால் இவை இரண்டும் இரு வேறு நிலைகளில் இயங்குவதால் இவற்றிற்கிடையேயான வித்தியாசமும் அதிகம்.
குழுமங்கள்
குழுமங்களில் நடக்கும் கருத்துப் பரிமாற்றங்கள் நிரந்தரமாக
சேமிப்பில் இருக்கும். கருத்துப் பரிமாற்றம் நிகழும் போது இணைப்பில் இல்லாவிட்டாலும் மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது குழுமத்திற்கு சென்றோ எந்த நேரத்திலும் நீங்கள் விவாதங்களை பார்வையிடலாம்.
ஆனால், இதில் உள்ள மிகப் பெரிய குறைபாடு கருத்துக்களைப் பரிமாறுவதில் உள்ள
வேகக் கட்டுப்பாடு.
உதாரணமாக உங்களக்கு தமிழில் ஒரு வலைப்பதிவு தொடங்க விருப்பம். வலைப்பதிவுகளின் பின்னணியில் இருக்கும் தொழில்நுட்பத்தை புரிந்து கொள்வதில்/உபயோகிப்பதில் உங்களக்கு சில சந்தேகங்கள்/தடங்கல்கள் இருக்கிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக உங்களுக்கு உதவி செய்வதற்காகவே ஒரு யாஹூ குழுமத்தினை (Yahoo group) நடத்தி வருகிறார்கள் வலைப்பதிவின் முன்னோடிகள்.
http://groups.yahoo.com/group/tamilblogs/ என்னும் அந்த குழுமத்தின் முகவரி உங்களுக்கு கிடைத்த உடன் சில கேள்விகளுடன் அந்த குழுமத்திற்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புகிறீர்கள். உங்கள் மின்னஞ்சல் கிடைக்கப் பெற்ற சில நிமிடங்களிலோ அல்லது சில மணிகளிலோ குழுமத்தின் உறுப்பினர் ஒருவர் உங்கள் கேள்வியினை வாசிக்கிறார். உடனேயே உங்களக்கு பதிலும் அனுப்புகிறார்.
அடுத்த முறை இணையத்தில் இணையும் போது அந்த பதில் மின்னஞ்சல் கிடைக்கப்பெற்ற உங்களுக்கு அவரது பதிலில் உள்ள சில விசயங்கள் புரியவில்லை. மீண்டும் சில கேள்விகளுடன் மின்னஞ்சல் செய்கிறீர்கள். மீண்டும் அதற்கு பதில் வந்து சேர சில நிமிடங்களோ, சில மணி நேரங்களோ ஆகலாம்.
இப்படியாக உங்களது பிரச்சனைக்குரிய தீர்வு உங்களுக்கு புலனாவதற்குள் இந்த முறையில் சில சமயம் சில நாட்களே கடந்து விடும்.
இப்போது IRC எப்படி வேறுபடுகிறது என்று பார்போம்.
IRCயில் எதுவுமே உடனுக்குடன்
அதே நேரம், IRCயில் எதுவுமே
உடனுக்குடன். இதில் இணைந்துள்ளவர்கள் கேட்கும் கேள்விகள் மற்றவர்களுக்கு அடுத்த நொடியே சென்றடைந்துவிடும். அதற்கு அவர்கள் அளிக்கும் பதிலும் உங்களை வந்தடைய நேரம் எடுக்காது. உங்களது பதில் கேள்விகளையும் நீங்கள் உடனேயே அனுப்பலாம். உங்களது சந்தேகங்களை தீர்த்துக்கொள்வதற்கும் கருத்துப் பரிமாற்றம் செய்வதற்கும் இது மிக வேகமான வழிமுறை.
ஆக இணைய குழுமங்கள் ‘தினசரி பத்திரிக்கை’ போன்றவை என்றால் கருத்துக்களையும் செய்திகளையும் உடனுக்குடன் கடத்துவதில் IRC ஓடைகள் ‘வானொலி’ போன்றவை.
தமிழா குழுவினர்
‘இதெல்லாம் இன்று ஏன் சொல்கிறேன்?’ என்று கேட்கிறீர்களா?.
மொசில்லா உலாவி (Mozilla browser),
ஓப்பன் ஆஃபிஸ் (Openoffice.org) போன்ற திறமூல செயலிகளை தமிழில் மொழிபெயர்த்துள்ள
தமிழா! குழுவினர் இப்போது “தமிழா! அரங்கம்” என்ற
IRC ஓடையினை தொடங்கியுள்ளார்கள். இது மிகவும் அருமையான முயற்சி.
இந்த IRC ஓடையில் இனைவதன் மூலம் தமிழ் மென்பொருட்களை உபயோகிப்பதில் உங்களுக்கு இருக்கும் சிக்கல்களை நீங்கள் தெளிவுப்படுத்துக் கொள்ளலாம்.
தமிழா!
முகுந்த மற்றும் வேறு சில நண்பர்கள் தங்களால் முடிந்த நேரம் எல்லாம் இந்த ஓடையின் வழியாக உங்களது சந்தேகங்களை தீர்த்து வைப்பார்கள். அதே நேரத்தில் தமிழா குழுவினர் தங்களது கருத்துக்களை பரிமாறிக் கொள்வதற்கு இந்த IRC ஓடை பயன்படும்.
இதற்கான முகவரி: irc://freenode/thamizha . (IRCயினை எப்படி உபயோகிப்பது என்று அடுத்த பதிவில் எழுதுகிறேன்.)
இன்னமும் தொடக்க நாட்களிலேயே இருக்கும் இந்த ஓடையில் சில சமயம் உங்களுக்கு பதிலளிக்க ஆட்கள் எவரும் இல்லாதிருக்கலாம். ஆனால் இந்த சேவை வரும் காலங்களில் மிகவும் பயனுள்ளதாக மாறும் என்று நம்புகிறேன்.
தமிழா குழுவினர் இந்த IRC ஓடையினை தொடர்ந்து செயல்படுத்துவார்கள் என்று நம்புகிறேன். செயல்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். ஆனால் அதற்கு ஆர்வர்களின் பலரின் ஒத்துழைப்பும் பங்கேற்பும் தேவைப்படும். ஆர்வமுள்ளவர்கள் இந்த முயற்சியில் பங்கேற்கலாமே!?
]]>
நான் கடைசியாக ஐ.ஆர்.சியைப் பயன்படுத்திப் பார்த்தபோது அதில் யூனிகோட் வேலை செய்யவில்லை. நம்மிடமிருந்து போகும் ஓடையில் UTF-8 ஆக இருப்பது, சேவைக்கணினியைக் கடந்து நண்பர்கள் கணினியில் வந்துசேரும்போது குழப்பமான குப்பையாகி விட்டது.
இதில் ஏதேனும் மாற்றம் உண்டா?
ஐ.ஆர்.சி எனும்போது – எப்படி இன்றைய வலைப்பதிவுகள் இரண்டாம் ஈராக் போரின்போது பிரமிக்கத்தக்க புது ஊடகமாகச் செயலாற்றினவோ, அதுபோலவே ஐ.ஆர்.சி, முதலாம் ஈராக் போரின்போது செயல்பட்டன. அதாவது 1989 முதலே.
1991 முதல் ஐ.ஆர்.சியில் ஈடுபட்டு வந்தேன். கிரிக்கின்ஃபோ தொடக்கத்தில் ஐ.ஆர்.சி பாட் ஆகத்தான் உயிர்பெற்றது (1993இல்). அதன்பின்னர்தான் கோஃபர், பின் எச்.டி.டி.பி வெப் என்றானது.
ஐ.ஆர்.சி என்பது நாலைந்து பேரோ (அல்லது நாற்பதைம்பது பேரோ) கூடிப் பேசும் இடம் மட்டுமல்ல. அதனிடம் மிகவும் எளிய நிரலி மொழி உண்டு. அதை வைத்து (ro)botகள் எனப்படும் குட்டி தானியங்கிகளை உருவாக்க முடியும். இந்தத் தானியங்கிகளை வைத்து சிற்சில காரியங்களை அழகாகச் செய்யலாம். யாராவது fuck, அல்லது அதுபோன்ற “கெட்ட” வார்த்தைகளைப் பேசினால் சானலை விட்டு வெளியேற்றலாம். நாமோ, நண்பர்களோ உள்ளே வரும்போது சலாம் <பேர்> என்று சலாம் போடவைக்கலாம், ops வசதி கொடுக்க வைக்கலாம்.
நாளடைவில் ஐ.ஆர்.சி, மற்ற இணைய சேவைகள் போல (மின்னஞ்சல், இணையத்தளங்கள், மெஸஞ்சர், வலைப்பதிவுகள்) பெரிதாகாமல் இருப்பதன் காரணம், இதன்வழியாக மக்களின் எந்த அத்தியாவசியத் தேவையும் பூர்த்தியாகாததும், ஆட்கள் அதிகமாகும்போது server ringஇல் உள்ள சேவைக்கணினிகள் ஒன்றோடொன்று எப்பொழுது பார்த்தாலும் பிரிந்தும் சேர்ந்தும் ஒரு சானலில் உள்ளவர்களுக்கு ஏகப்பட்ட கஷ்டங்களைக் கொடுப்பதாலும்.
மெஸஞ்சர் வேலை செய்வதற்கும், ஐ.ஆர்.சி வேலை செய்வதற்கும் நிறையவே வித்தியாசங்கள் உள்ளன.
பத்ரி,
மொசில்லா மற்றும் ஃபயர்ஃபாக்ஸில், chatzilla கொண்டு தடங்கலின்றி யுனிகோடு பாவிக்க முடிகிறது. அது தவிர வேறு சில செயலிகளை சோதித்து பார்த்ததில் தமிழில் தட்டச்ச முடியவில்லை. ஆனால் வாசிக்க முடிகிறது.
மற்றபடி நீங்கள் சொல்வது போன்ற பல குறைபாடுகள் இருந்து வந்தாலும் பல OSS (Open Source Software) குழுக்கள் ஐ.ஆர்.சியை சிறப்பான முறையில் இன்றளவும் உபயோகித்து வருகிறார்கள். (இன்று IRC என்பது Warez அதிகம் புழங்கும் இடமாகவும் ஆகிப் போனது வேறு கதை.)
OSS பயனர்கள் தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கு பொதுவாக உபயோகிப்பது 1) documentation, 2) newsgroups, 3) IRC . இதில் ஐ.அர்.சி மூலமாக கிடைக்கும் உதவியின் வேகம் பலரின் பார்வையை திறமூல மென்பொருட்கள் பக்கம் திருப்பியது உண்மை.
மிகச் சரியாக சொன்னீர்கள். அதே போல் கோப்புகளை பகிர்ந்து கொள்வதற்கும், சில கேள்விகளுக்கான பதில்களை தானாகவே அளிப்பதற்கும் அதற்கு சொல்லிக் கொடுக்கலாம். இந்த சேவையை பலர் உபயோகிக்க துவங்கும் போது IRC botகள் கண்டிப்பாக தேவைப்படும். முகுந்த மற்றும் குழுவினர் அதற்கு திட்டம் வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
உண்மை. மெஸஞ்சர் பற்றி குறிப்பிடும் போது கொஞ்சம் யோசனையுடனே தான் எழுதினேன். இரண்டையும் ஒப்பிட்டதற்கு காரணம் பிறர் புரிந்து கொள்வதற்கு எளிதாக இருக்கும் என்பதால் தான். ஐ.அர்.சி உபயோகிப்பது என்பது கிட்டத்தட்ட மெஸஞ்சர் உபயோகிப்பது போல (கடை நிலை பயனர்களுக்கு). ஆனால் செயல்படும் விதத்திலும் பயன்பாட்டிலும் இரண்டும் ரொம்பவே வேறுபடுகின்றன.
உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன். ஐ.ஆர்.சி அனைத்து தேவைகளுக்கும் தீர்வாகாது. ஆனால் தமிழா குழுவின் இப்போதைய தேவைகளுக்கு இது மிகவும் உபயோகமாயிருக்கும் என்று நம்புகிறேன். அது தவிர இந்த IRC channel தனித்து இயங்க முடியாது. இணைய குழுமத்துடன் சேர்ந்து செயல்படும் போது இது உபயோகமான ஊடகமாயிருக்கும்.
இப்போதைக்கு இந்த முயற்சி ஆரோக்கியமான ஒன்றாகவே எனக்கு தோன்றுகிறது. ஆனால் இதனை செயல்படுத்துவதிலும், உபயோகிப்பதிலும் தான் இதன் எதிர்காலம் புலனாகும்.
நானும் பரிசோதித்துப் பார்த்தேன். இப்பொழுது வேலை செய்கிறது. நான் இதற்குமுன் பரிசோதித்தது கிட்டத்தட்ட ஒரு வருடம் முன்னர்.
இது எல்லா ஐ.ஆர்.சி சர்வர் நெட்வொர்க்க்கிலும் வேலை செய்யும் என்றே நம்புகிறேன்.