இராட்சஸ ஜந்து

என்ன ஏதென்று மூளைக்கு பிடிபடுவதற்கு சில விநாடிகள் ….. கழித்து ஏதோ ஒன்று கடித்து விட்டது புரிந்து லைட்டை போட்டேன்.

கடித்த அந்த ஜந்துவை சுத்தி முத்தி தேடிப் பார்த்தால் ஒன்றுமே கிடைக்கவில்லை. கண்டிப்பாக அது வண்டு , தேனீ மாதிரி ஏதோ பறக்கிற பூச்சியாக தான் இருக்கனும். இல்லைனா அதுக்குள்ளே காணாமல் போயிருக்க முடியாது. கோடையின் புழுக்கத்துக்காக ஜன்னலை வேற திறந்து வைத்திருந்தேன். படுத்ததே ஒரு மணிக்கு தான். இரண்டரைக்கு இந்த மாதிரி ஒரு அழையா விருந்தாளி வந்து எழுப்பி விட்டுட்டா என்ன செய்றது. வலி வேற பிராணனை வாங்கிட்டிருந்ததா, திரும்பி தூங்குறதுக்கு 4:30 ஆகி விட்டது. காலையிலே வழக்கம் போல ஆஃபிஸ்க்கு அரை மணி நேரம் லேட். அந்த ஜந்து வேறு என்னொட கையோட நடுவிரலை பார்த்து கடித்து வைத்திருந்தது.

நகச்சுத்தி வந்தவன் மாதிரி அந்த ஒத்தை விரலை நீட்டிக்கிட்டே இருக்கலாம். ஆனா இந்த ஊரிலே தான் நடு விரலை மட்டும் நீட்டி காட்டினால் அதற்கு ஒரு ஆபாசமான அர்த்தம் இருக்கிறதே. அதனால் நானே பார்ப்பவரிடம் எல்லாம் தன்னிலை விளக்கம் மாதிரி நேத்து இராத்திரி இது தான் நடந்தது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லிவிட்டேன். எங்க மானேஜர் மட்டும் கேட்டார், "ஓ! அதனால் தான் இன்றைக்கு லேட்டா வந்தீங்களோ"ன்னு. ஆமாம்னு சொன்னா ‘அப்பம் மத்த நாளெல்லாம் ஏன் லேட்டு’ன்னு கேள்வி வருமேன்னு ….. நான்…. கப்சிப்.

]]>