"பகல்ல பக்கம் பாத்து பேசு. இராவுல அதுவும் பேசாதேம்பாங்க." இப்பம் புதுசா வந்திருக்க Rbot-GR வைரஸ பத்தி படிச்சதுக்கப்புறம் பேசுறது என்ன மூச்சு விடுறதுக்கு முன்னாடி கூட ரொம்ப யோசிக்கனும் போல இருக்கு. ஆசையாக ‘வெப் கேம்’ வாங்கி வைத்திருப்பவர்களுக்கெல்லாம் கிலி உண்டாக்குகிறது இந்த வைரஸ்.
இந்த வைரஸ் என்னவெல்லம் செய்கிறது தெரியுமா?
- தான் தாக்குகின்ற கணினிகளில் ஒரு ட்ரோஜன் ஹோர்ஸை விட்டு செல்கிறது.
- இந்த ட்ரோஜன் ஹோர்ஸ் ஒரு பேக் டோர் ப்ரோகராமாக உங்கள் உட்கார்ந்து கொண்ட பின் உங்கள் கணினியின் கடிவாளம் உங்கள் கையில் கிடையாது. அடுத்தவர்களின் முழு கட்டுப்பாட்டிற்குள் அது சென்று விடும்.
- அப்புறம் நீங்கள் Pay-Pal கணக்கு வைத்திருந்தீர்களானால், உங்களது கணக்கிற்கான கடவுச்சொல்லை ஒற்றறிந்து அதன் எஜமானர்களுக்கு தெரிவித்து விடும்.
- இதெல்லாம் விட அபாயமான விஷயம் ஒன்னு இருக்கு. உங்கள் கணினியின் வெப்-காம் மற்றும் ஒலி வாங்கியை (Microphone) இது கட்டுப்படுத்த வல்லது.
- தானாகவே உங்கள் வெப்-காமை இயக்கி உங்கள் வீட்டில் நடப்பதை படம் பிடித்து யாருக்காவது நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடும்.
இதில் ஆறுதலான விஷயம் என்னவென்றால், இந்த வைரஸ் வேகமாக பரவவில்லையாம். அதனால் இதன் பாதிப்பு குறைவாகத்தானிருக்கும் என்று நம்பப்படுகிறது. அதே நேரத்தில் இந்த வைரஸை Proof-of-conceptஆ எடுத்துக் கொண்டு இனிமேல் எத்தனை வைரஸ் வரப்போகிறதோ என்று நினைக்கும் போது தான்…..
‘உலகமே ஒரு நாடக மேடை’ன்னு சொல்வார்களே. இந்த Rbot-GR தாக்கினதுக்கு அப்புறம் நீங்கள் உண்மையிலேயே நாடக நடிகர் தான். ஆனால், நீங்கள் இந்த நாடகத்தில் பங்கேற்பதோ அல்லது உங்கள் நாடகத்தை யாரோ எங்கேயோ உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்பதோ உங்களுக்கு தெரியாது.