சாகரன்

“தேன்கூடு சாகரன் அவர்களுக்கு அஞ்சலி”ன்னு ஒரு அறிவிப்பு. முதல்ல சாகரனுக்கு நன்றின்னு தப்பா வாசித்து பதிவை திறந்ததற்கு அப்புறம் தான் அதிர்ச்சி உரைத்தது.

வலைப்பதிவுலகில் நான் சம்பாதித்த நட்புகளில் முதன்மையானவர் கல்யாண். சமீப காலமாக அவருடன் அதிக தொடர்பு இல்லை என்ற போதும்..

கடைசியாக தொடர்பு கொண்டது அவர் தேண்கூடு தளத்தினை உருவாக்கி கொண்டிருந்த போது. என்னோட Website பார்த்துக் கொண்டிருந்த போது புது referer தெரியவே … என்ன தளம் என்று தொடர்ந்து சென்று பார்த்ததில் இவர் இந்த தளத்தை உருவாக்கி வருநது தெரிந்தது. ஆஹா நண்பர் இப்படி ஒரு வேலை செய்துட்டிருக்காரான்னு சும்மா வம்பு செய்யலாம்னு ஒரு membership ID உருவாக்கிட்டு வந்துட்டேன். அப்போது அந்த தளம் பற்றிய அறிவிப்பு ஏதும் வந்திருக்கவில்லை.

அடுத்த நாள் ரொம்ப சந்தோசமா மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

Dec 7, 2005 4:49 PM
அன்பு நவன்,

வணக்கம், நலம். நீங்க எப்படி இருக்கீங்க.

என்ன, கல்யாணம்லாம் ஆயிடுச்சா?! :-)

ஒரு சிஸ்டம் ஒண்ணு டெவலப் பண்ணிகிட்டிருக்கிறேன். தேன்கூடு.காம் அப்படின்னு,
தமிழ் வலைப்பதிவுகளை வகைப்பிரிக்கும் ஒரு வலைப்பதிவுகள் வாசல்(போர்டல்) மாதிரி.
தமிழ்மணத்துக்கு போட்டியா இல்ல.. ஆனா, ஒரே ஒரு வலைப்பதிவுகள் திரட்டி தமிழ்ல இருக்கறது சரியில்லைனு தோணுது.

உங்க ஐடி-யை இன்னிக்கு மெம்பர்லிஸ்டில் பார்த்தேனா, சந்தோசமாயிடுச்சு.

சைட் எப்படி வந்திருக்கு? நல்லாருக்கா?
உங்க கருத்துக்களை ரொம்பவும் எதிர்பார்க்கிறேன்.

எனக்கு மறக்காம மெயில் அனுப்புங்க.

அன்புடன்,
சாகரன்.

அதன் பின்பு ஓரிரு முறை அவருடன் email தொடர்பு கொண்டது தான். கடந்த 18 மாதங்களில் எனது வாழ்க்கை மாறிப்போனது… சாகரனுடனான தொடர்பும் அறுந்து போனது. அப்பப்பம் தேன்கூடு தளத்தை பார்த்திருக்கேன். Good jobன்னு மனசுக்குள்ளேயே பாராட்டிருக்கேன். இடைபட்ட இந்த காலத்தில் தேன்கூடு மூலமாக அவர் செய்திருக்கும் சாதனைகளின் வீச்சு இப்பம் தான் புரியுது. வலைப்பதிவர்கள் சாகரனை பத்தி எழுதும் போது.. அவரை பற்றிய மதிப்பு இன்னும் கூடுது.

கூடவே எனது வாழ்க்கையில் நான் என்ன சாதித்து விட்டேன் என்ற கேள்வியும் வருது…

அப்துல் கலாமின் இந்த வரிகள் ஏனோ இன்னும் அர்த்தம் வாய்ந்ததாக தோன்றுகிறது…

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!

இது வரைக்கும் நேரில் பார்க்காதவரை இன்று தான் புகைப்படமாக மத்த பதிவுகளில் பார்த்தேன்.

நண்பர் ஒருவரை இழந்த இழப்பு. மனது வலிக்கிறது. அவர் குடும்பத்தாருக்கு யார் எந்த வகையில் ஆறுதல் சொல்ல முடியும்? அவர்களுக்காக பிரார்த்தனை செய்வது தான் இப்போதைக்கு தேவையான விசயம்னு தோனுது.

சாகரன் தொடங்கிய பணிகளை தொடர்வதற்கு என்னாலான உதவிகள் எதுவானாலும் செய்ய காத்திருக்கிறேன். தேன்கூடோ அல்லது அவரது மற்ற திட்டங்களோ தொடர்வதற்கு என்ன தேவைன்னு யாராவது சொல்ல முடியுமா ப்ளீஸ்…