வெளையாட்டை வேடிக்கை பார்க்கலாம்னு போன என்னையும் உள்ளே இழுத்து விட்டுட்டாரு அல்வாசிட்டி.விஜய். யோவ் விஜய்! இது உமக்கே நியாயமா படுதா…வே? என்னவோ நல்லாயிருவே… நல்லாயிரு.
எனக்கு எந்த வேலை செய்தாலும் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. எதை எடுத்தாலும் அகல உழுது தான் எனக்கு பழக்கம். என்னோட புத்தக வாசிப்பும் அதே மாதிரி தான். எல்லா தரப்பட்ட புத்தகங்களையும் படிச்சிருக்கேன். ஆனா யோசிச்சு பார்த்தா பிடிச்ச 5 புத்தகத்தை பட்டியல் போடனும்னா ரொம்ப கஷ்டமா போயிட்டுது.
ஏற்கெனவே ரொம்ப பேர் சொன்னது போல் எனது வாசிப்பு அனுபவமும் காமிக்ஸ் புத்தகங்கள், அம்புலிமாமா, ரத்னபாலா அப்புறம் ‘தினமலர்’ சிறுவர் மலர் இப்படித் தான் தொடக்கம்.
வீட்டில அம்மா, அப்பா, மாமா, சித்தி இவங்க எல்லாம் சின்ன வயசில வாங்கின பரிசு புத்தகங்கள் நிறைய இருந்தது. பெரும்பாலும் சிறுவர்களுக்காக எழுதப்பட்ட எளிமையான புத்தகங்கள். மகாத்மா காந்தி, மார்டின் லூதர் கிங்க், நேரு, வல்லபாய் பட்டேல் இப்படி நிறைய பேரின் வாழ்க்கை வரலாறு இது மாதிரி சின்ன சின்ன புத்தகங்களில் இருந்து தான் தெரிஞ்சுக்கிட்டேன்.
எங்க வீட்டுல ஒரு நல்ல பழக்கம் பெரும்பாலும் பரிசு கொடுப்பது புத்தகங்களாக தான் இருக்கும். அது தவிர அப்போது நிறைய ரஷ்ய புத்தகங்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் வெளி வரும். வீட்டில ஒரு பெரிய ரஷ்ய புத்தக கலெக்ஷ்னே வைச்சிருந்தேன். “சோவியத் யூனியன்” என்று ஒரு பத்திரிக்கை வரும். இந்த பத்திரிக்கையின் ஆங்கில/தமிழ் பதிப்பு இரண்டுமே ரொம்ப நாளாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்தது. இப்போது பெயர் சரியாக நினைவில் (Misha என்று நினைக்கிறேன்) இல்லாத ஒரு (சோவியத்) சிறுவர் பத்திரிக்கையும் இருந்து ரொம்ப நாளாக வீட்டுக்கு வந்தது.
காமிக்ஸ் புக் எல்லாம் போர் அடித்த ஒரு நாளில் வீட்டில் இருந்த பெரிய புத்தகங்களின் மீது கண் பட பைண்ட் செய்யப்பட்ட புத்தகங்களை ஒவ்வொன்றாக எடுக்க தொடங்கினேன். பழைய “ஆனந்த விகடன்” இதழ்களை பைன்ட் செய்து வைத்திருந்ததை படித்து முடித்ததும் நான் படித்து முடித்த முதல் பெரிய புத்தகம் “ராவ்பகதூர் சிங்காரம்” – முழு நாவல் (எழுதியவர் யாரென்று தெரியவில்லை). ஒரு கோடை விடுமுறையின் போது இரண்டு வாரங்களில் படித்து முடித்தேன் என்று நினைக்கிறேன். அப்புறம் படித்த வேறு சில நாவல்களின் பெயர்கள் இப்போது நியாபகம் இல்லை. ஆங்… அறிஞர் அண்ணாவின் “வேலைக்காரி” மட்டும் இப்போது நினைவில் இருக்கிறது. அந்த நாட்களில் படித்த இன்னொரு புத்தகம் “சத்திய சோதனை“.
இதெல்லாம் நான் 8ஆம் வகுப்பு முடிக்குமுன் நடந்தவை. வீட்டிலிருந்த சின்ன லைப்ரரியினை காலி செய்ததும் பொது நூலகத்துக்கு போய் வாசிக்கும் பழக்கத்தை ஏனோ தொடராமல் விட்டு விட்டேன். அந்த வெற்றிடத்தை நிரப்ப பக்கத்து வீட்டு அண்ணன்மாரிடமிருந்து ராஜேஷ்குமார் கிடைத்தது. இடையில் 10, 12 தேர்வுகளுக்கு தயார் செய்கிறேன் பேர்வழி என்று பாட புத்தகங்கள் தவிர பிற புத்தங்களின் வாசம் மொத்தமாக மறந்து போனது.
கல்லூரி நாட்களில் அதிகம் படித்த/பிடித்த இரண்டு எழுத்தாளர்கள் பாலகுமாரன் மற்றும் சுஜாதா.
ஒரு கால கட்டத்தில் புத்தகங்களை விரும்பி வாசிப்பதற்காக பதிலாக பிறரிடம் நானும்் இதனை வாசித்து விட்டேன் என்று சொல்வதற்காகவே சில புத்தகங்களை வாசித்தது உண்டு.
எல்லாரும் காப்மேயர் போன்று சய முன்னேற்ற புத்தகங்களை படிக்கையில் எனக்கென்னவோ அது போன்ற புத்தகங்களில் சுத்தமாக ஈடுபாடு இருந்தது கிடையாது. நண்பன் எவனாவது வந்து இதை படி. ‘ரொம்ப நல்ல புக்’னு சொன்னாலும் ‘நான் தெளிவு பெற இது மாதிரி புத்தகங்கள் தேவையில்லை. நான் யாருன்னு எனக்கு தெரியும். என் திறமைகளை தெரிஞ்சுக்கிறதுக்கு இந்த மாதிரி புக் படிக்க தேவையில்லை’ன்னு பதில் சொல்லியிருக்கேன்.
ஆனா ரொம்ப நாள் கழித்து சில தோல்விகளால் மனம் மிகவும் குழப்பமடைந்திருந்த போது மன அமைதியும், நம்பிக்கையும் ஒரு புத்தகத்தை வாசிக்கையில் கிடைத்தது. அந்த புத்தகம் “How to stop worrying and start living” – Dale Carnegie. அதுக்கப்புறம் நிறைய பேருக்கு அந்த புத்தகத்தை பரிசா வாங்கி கொடுத்திருக்கேன்.
இதைத் தாண்டி தீவிர இலக்கியம் பற்றி அறிந்ததும் இல்லை. அதற்கான முயற்சியும் எடுத்ததும் இல்லை.
நிற்க. அது என்னமோ தெரியலை. புத்தகங்களை பற்றி எழுத சொன்னால் இப்படி ஒரு சிறு வாழ்க்கை வரலாறு எழுத தோனுது. சரி இப்பம் விளையாட்டிற்கு வருவோம்.
நான் வாங்கிய புத்தகங்கள் 200-250 இருக்கும். அதில் தமிழ் 75 இருக்கலாம் என்று நினைக்கிறேன். இங்கே இப்போது ஒரு 50-60 இருக்கும்.
பிடித்த ஐந்து தமிழ் புத்தகங்கள்
– பயணிகள் கவணிக்கவும் – பாலகுமாரன்
– சிவகாமியின் சபதம் – கல்கி
– வந்தார்கள் வென்றார்கள் – மதன்
– ரத்தம் ஒரே நிறம் – சுஜாதா
– கள்ளிக்காட்டு இதிகாசம் – வைரமுத்து
சமீபத்தில் படித்த புத்தகங்கள்
– என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் – மனுஷ்ய புத்திரன்
– சிந்தையில் ஆயிரம் – ஜெயகாந்தன் (ஜெயகாந்தன் வலைப்பதிவு வைத்திருந்தால் இப்படித் தான் இருந்திருக்கும் என்று தோன்றியது்)
– India 2020 – APJ Abdul Kalam with Y S Rajan
– Hostage – Robert Crais
– On the street where you live – Mary Higgins Clark
வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகங்கள்
– How Britain Made the Modern World – Niall Ferguson
– A History of South India – K.A. Nilakanta Sastri
– 19ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம் – மயிலை சீனி. வேங்கடசாமி
– Holy Cow! – Sarah Macdonald
– விஷ்னுபுரம் – ஜெயமோகன் (ஒரு நாலு தடவையாவது முயற்சித்திருப்பேன்… 15ஆவது பக்கத்தை தாண்ட முடியலை. எப்படியும் ஒரு long weekendல படிச்சுடலாம்னு இருக்கேன்.)
சமீபத்தில் பரிசாக கிடைத்த புத்தகங்கள்்
– Roger’s Profanisaurus – Viz (The Ultimate Swearing Dictionary … ரொம்ப உதவியா இருக்குது 🙂 )
– (நண்பரின் தந்தை பரிசளித்த இரு பழைய புத்தகங்கள்)
– திருக்கோவையாருரை – ஆங்கீரச ஆண்டு (ரோமன் ஆண்டு என்னென்னு யாருக்கும் தெரிஞ்சா சொல்லுங்களேன்)
– அகத்தியமுனிவர் திரட்டியருளிய தேவாரப்பதிகங்கள் – திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சுக்கில ஆண்டு (ரோமன் ஆண்டு?)
என்ன மாதிரியான புத்தகங்களை அதிகமாக படித்திருக்கிறேன் என்று யோசித்து பார்க்கையில் குழப்பம் தான் மிஞ்சுகிறது. அந்தந்த நேரத்தைய தேடலை பொறுத்து நான் படிக்கும் புத்தகங்களும் மாறி வருகிறது.
சரி இப்பம் யாரை இந்த விளையாட்டுக்கு கூப்பிடலாம்? நான் அழைக்கும் ஐந்து பேர்…
– வாசன்
– அன்பு
– செல்வராஜ்
– ஷ்ரேயா
– பரி
அப்பாடி…! Relay raceல என் lap முடிஞ்சுது.
ஆங்கீரச ஆண்டு – 1932
சுக்கில ஆண்டு – 1926
நன்றி: விக்சனரி
உங்க புண்ணியத்தாலே நாலஞ்சி புத்தகத்தோட அறிமுகம் கிடைத்தது. நன்றி தலீவா. பதிவு அருமை.
>>ஒரு நாலு தடவையாவது முயற்சித்திருப்பேன்… 15ஆவது பக்கத்தை தாண்ட முடியலை—
Same here 🙂
-balaji
Boston
சத்தம் போடாம இருந்தவன மாட்டி உட்டுட்டீங்க. நன்றி. இன்னும் கொஞ்சம் நேரத்துல பதிவ அனுப்பிடறேன். எனக்கும் அந்தக் காலத்தில் அதிகம் படித்த பிடித்த எழுத்தாளர்கள் சுஜாதாவும் பாலகுமாரனும் தான். இப்படி ஒரு தனிக் கூட்டமே இருப்போம் போல.
//விஷ்னுபுரம் – ஜெயமோகன் (ஒரு நாலு தடவையாவது முயற்சித்திருப்பேன்… 15ஆவது பக்கத்தை தாண்ட முடியலை. எப்படியும் ஒரு long weekendல படிச்சுடலாம்னு இருக்கேன்.) //
ஆமாம் ஆரம்பம் கொஞ்சம் அப்படித்தான். அதற்கு இந்த வரைபடம், வருணனை இவையெல்லாம் காரணமாக இருக்கலாம். ஆனால் கடின உழைப்பைக் கோரியிருக்கும் புத்தகம்.
நன்றி!
Pingback: என் எண்ணக் கிறுக்கல்கள் - செல்வராஜ் » Blog Archive » வாசிப்பனுபவப் பகிர்வுப் பரவல்
பாலாஜி: ஹைய்யா! நான் மட்டும் தான் அப்படின்னு நினைச்சுட்டிருந்தேன். கம்பெனிக்கு நீங்களும் இருக்கீங்க!
//ஆமாம் ஆரம்பம் கொஞ்சம் அப்படித்தான். அதற்கு இந்த வரைபடம், வருணனை இவையெல்லாம் காரணமாக இருக்கலாம்.//
தங்கமணி: அப்படித்தான் நினைக்கிறேன். அடுத்த முறை எந்த விதமான குறுக்கீடும் இல்லாத ஒரு நாளில் இந்த புத்தகத்தை கையில் எடுக்க வேண்டும்.
//எனக்கும் அந்தக் காலத்தில் அதிகம் படித்த பிடித்த எழுத்தாளர்கள் சுஜாதாவும் பாலகுமாரனும் தான். இப்படி ஒரு தனிக் கூட்டமே இருப்போம் போல.//
செல்வா: பாலகுமாரனை இத்தனை பேர் நினைவு கூறுவார்கள் என்று நானும் எதிர்பார்க்கவில்லை. வலைப்பதிவர்கள் பெரும்பாலோர் ஒத்த வயதுடையவர்களாய் இருப்பதால் (அந்த காலத்தைய) பாலகுமாரன் இன்றும் மனதில் நிற்கிறார். ஆனால் இப்போது பாலகுமாரன் எழுதும் எழுத்துக்களில் ஒன்ற முடியவில்லை.
பாலகுமாரனின் படைப்புகளில் வரும் பெண் பாத்திரங்கள் எனக்கு மிகவும் பிடித்தவை.
சுஜாதா – தமிழ் எழுத்துலகின் இளையராஜா என்று சொல்லலாம் போலிருக்கிறது. இவரைப் படிக்காதவர்/பிடிக்காதவர்) சொற்பம் என்று நினைக்கிறேன்.
மதனின் வந்தார்கள் வென்றார்கள் தற்சமயம் என்னிடம் உள்ள புத்தகங்களில் ஒன்று.
எனக்கும் பிடித்திருந்தது.
சுஜாதாவின் பெரும்பாலான ஆரம்பகாலப் புத்தகங்களை நானும் விரும்பிப் படித்தேன்.
Pingback: கொள்ளிடம் » நூல்கள் - புத்தகங்கள் - பொத்தகங்கள் : 1
ஜெயமோஹனின் விஷ்ணுபுரம் குறித்த பதிவுகள் பார்த்தேன். முதல் இருபது பக்கங்கள் ஒருதேடல் பற்றி விளக்கபடுகிறது. அவற்றை தாண்டினால் நாவல் தெளிவடயும் என்றே நம்புகிறேன்.
Pingback: செல்வராஜ் 2.0 » Blog Archive » வாசிப்பனுபவப் பகிர்வுப் பரவல்