ரஷ்யாவின் ஒசெட்டா மாகாணத்தில் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த பள்ளியில் இன்று காலை ரஷ்ய துருப்புகள் அதிரடியாக நுழைந்தனர். தொடர்ந்து நடந்த சண்டையில் பிணைக்கைதிகள் விடுவிக்கப் பட்டுள்ளனர்.
இன்று காலை வரை பேச்சுவார்த்தைகள் வெற்றியடையும் என்ற நம்பிக்கையில் காத்திருந்த பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் இன்று கேட்ட முதல் வெடிச் சத்தம் அதிர்ச்சியளித்திருக்க வேண்டும். வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி சத்தம் கேட்ட சில நொடிகளிலேயே ரஷ்ய துருப்புகள் பள்ளி கட்டிடத்திற்குள் நுழைய வேண்டியிருந்திருக்கிறது.
அதனை தொடர்ந்த நடந்த துப்பாக்கி சண்டைக்கு பிறகு பிணைக்கைதிகள் வெளியேறியிருக்கிறார்கள்.
தொலைக்காட்சியில் நான் கண்ட/கேட்ட காட்சிகளில் இருந்து சில
- ராணுவ வீரர்களின் உதவியுடன் தப்பிய மாணவ/மாணவிகளில் பெரும்பாலானோர் வெறும் உள்ளாடைகள் மற்றுமே அணிந்திருந்தனர்.
- 250 பேர் காயங்களுடன் மருத்தவமனையில். அவர்களில் 180 பேர் குழந்தைகள்.
- தப்பிய குழந்தைகள் முதலில் கேட்டது தண்ணீர். ஏறத்தாள மூன்று நாட்களாக அவர்கள் குடிப்பதற்கு கூட எதுவும் கிடைத்திருக்கவில்லை.
- முதல் துப்பாக்கி சத்தம் கேட்டதும் தலையில் கை வைத்துக்கொண்டு அழுத பெற்றோர்கள்/உறவினர்கள். அவர்கள் முகத்தில் தெரிந்த பீதி.
- தனது பெயரை கூட சொல்ல முடியாத நிலையில் (அதிர்ச்சியில் இருந்து மீளாத) மாணவன்.
- (இரத்த) காயமடைந்த கால்களுடன் குழந்தைகள். நிருபர்கள் கூறியதிலிருந்து இந்த காயங்கள் துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் தீயினால் நேர்ந்தவை.
- தப்பித்த வந்த சில மாணவர்கள் தங்கள் பெற்றோரை காணாமல் மலங்க மலங்க முழித்தது.
- சண்டை துவங்கிய 2 மணி நேரத்திலேயே பள்ளி கட்டிடம் முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டதாக ரஷ்ய அதிகாரிகள் அறிவித்தாலும் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் இன்னமும் (கிட்டத்தட்ட 4 மணி கடந்த பின்னும்) பலமாக கேட்டுக்கொண்டு தான் இருக்கிறது.
- முதலில் தப்பி வந்த மாணவர்கள் அனைவரும் 10 வயதுக்கு மேட்பட்டவர்கள்.
- 5,6 வயது மாணவர்களின் நிலமை இன்னும் மோசமாக இருக்கலாம் என்று அஞ்சுகிறார்கள்.
இந்த கடத்தல் நாடகம் முடிவுக்கு வந்த மாதிரி தோன்றினாலும், தப்பி ஓடிய தீவிரவாதிகள் பக்கத்தில் உள்ள சில வீடுகளில் புகுந்து அங்குள்ளவர்களை பிணையாக பிடித்து வைத்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
ரஷ்யாவில் கடந்த சில வருடங்களில் நடந்த கடத்தல் நாடகங்களுக்கும் இதற்கும் பல ஒற்றுமைகள் காண முடிகிறது. எத்தனை பேர் காயமடைந்திருக்கிறார்கள், உயிரிழப்புகள் எத்தனை என்பதை பற்றி உண்மை விபரங்கள் வெளிவருமா என்பது தெரியவில்லை. இது வரை கிடைத்த செய்திகள் 10 உயிரிழப்புகள் நேர்ந்திருப்பதாக தெரிவிக்கின்றன.
என்ன உலகம் இது? பிரச்சனைகளையும், கருத்து பேதங்களையும், பேசி தீர்க்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. இது போன்று அப்பாவிகள் மற்றும் குழந்தைகளின் உயிரினை பணயம் வைத்து விளையாடமலிருக்க முடியாதா?
அது வரை மொழி வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி, இன்னும் எத்தனை வளர்ச்சிகள் நேர்ந்தாலும் புண்ணியம் இல்லை.
இந்த நிகழ்வினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், ஆசரியர்கள், பெற்றோர்கள் மற்றும் உறவினர்களின் வாழ்க்கை இனி என்றும் பழையபடி (நிம்மதியாக) இருக்க போவதில்லை.
நம்ம வசூல்ராஜா சொல்ற மாதிரி இன்றைக்கு உலகத்திற்கு தேவை கடவுளோ, அறிவியலோ வேற எந்த மண்ணாங்கட்டியோ கிடையாது. கட்டிப்பிடி வைத்தியம் தான்.
இறுதியாக கிடைத்த செய்திகள் (ITV) உயரிழப்பு 100க்கு மேல் இருக்கும் என்று தெரிவிக்கின்றன.
]]>
இது ஆப்பிழுத்தகதையாகத்தான் முடியப்போகிறது.
கடத்தல்காரர்களுக்கு பணிவதில்லை என்பது ஒருபுறம். இருக்க பொதுமக்கள் 150 பேர்களுக்கு மேலேயே இறந்திருக்கிறார்களே..ஏற்கனவே முன்னாரும் பணயக்கைதிகள் நாடகத்தில் மயக்கவாயு பாவித்து கடத்தல்காரர்களை மட்டுமல்லாது பணயக்கைதிகளையும் அரசு கொன்றது.இப்பnhழுது இது.
அடுத்தமுறை கடத்தல்காரர்கள் இன்னும் புத்திசாலிகளாக இயங்குவார்கள் .பாதிக்கப்படப்போவது பொதுமக்களே..
[1]
இந்த முறை உள்ளே வெடிச்சத்தம் கேட்டது. குழந்தைகளை நோக்கி அவர்கள் சுட தொடங்கியதும் வேறு வழியில்லாமல் நாங்களும் அதிரடி நடவடிக்கையில் இறங்க நேர்ந்தது என்று சொல்வதும் நம்பக்கூடியதாக இல்லை.
இன்னும் கொஞ்ச நஞ்சம் இருக்கின்ற மனித நேயமும் மரித்துக் கொண்டிருப்பது தான் கவலை தருகின்றது.
//அடுத்தமுறை கடத்தல்காரர்கள் இன்னும் புத்திசாலிகளாக இயங்குவார்கள் .பாதிக்கப்படப்போவது பொதுமக்களே..//
உண்மை தான் சுரதா. பொது மக்களின் உயிர்களை பற்றி தீவரவாதிகளுக்கு மட்டும் தான் கவலையில்லை என்று நினைத்திருந்தேன். ஆனால் ரஷ்ய அரசு அப்பாவிகளின் உயிரை எந்த அளவிற்கு மதிக்கிறது என்பது கேள்விக்குறியாகிவிட்டது.
நாளை மற்ற நாடுகளும் ரஷ்யாவை முன் மாதிரியாக எடுத்துக்கொள்ளாமல் இருக்க வேண்டும்.