வலைப்பதிவுகளில் வகைபிரித்தல்

வலைப்பதிவர் மன்றத்தில் சமீபத்தில் வலைப்பதிவுகளை வகை பிரித்தல் பற்றிய விவாதத்தை படித்தேன்.

இது பற்றி சில சிந்தனைகள் எழ, சில திறமூல நிரலிகளை பயன்படுத்தி எனது மடிக்கணினியில் ஒரு சோதனை செய்து பார்த்தேன். WordPressஇற்குள் இயங்குமாறு ஒரு திரட்டியினை நிறுவி, தமிழ் வலைப்பதிவுகளை திரட்டி WordPressஇற்குள் பதிக்கும் வகையில் ஒரு ஏற்பாடு செய்து வைத்திருக்கிறேன்.

WordPress, Nucleus, Moveable Type போன்றவை கொண்டு இயங்கும் வலைப்பதிவுகளில் பதிவுகளை ‘வகை பிரிக்கும்’ செயல்பாடு இருப்பதால் வலைப்பதிவர்களே தங்கள் பதிவுகளை ஒரு தலைப்பின் கீழ் வகை படுத்த முடியும். ஆனால் ப்ளாக்கரில் இந்த செயல்பாடு கிடையாது என்றே நினைக்கிறேன். பதிவுகளை வகைப்படுத்தும் ஒரு முயற்சியாக Technorati tags இப்போது பிரபலமடைந்து வருவதையும் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

எனது சோதனை மனற்தொட்டிக்கான உரல் இதோ. இங்கே ஏற்கெனவே வகைப்படுத்தப்பட்ட பதிவுகள் அந்தந்த தலைப்புகளின் கீழ் தானாக திரட்டப் பட்டிருப்பதை காணலாம். ஆனால் பிளாக்கர் பயனர்களின் பதிவுகள் அனைத்தும் பொதுவான தலைப்பின் கீழ் மட்டும் தான் கிடைக்கும்.

இந்த சோதனை செய்து பார்த்ததில் தோன்றிய இன்னொரு சிந்தனை. தமிழ்மணத்தில் ஒரு வலைப்பதிவர் எழுதிய அனைத்து பதிவுகளையும் பட்டியலிடும் ஏற்பாடு இருந்தால் சௌகரியமாக இருக்கும்.

இந்த தளம் is Just a proof of concept. இதில் நேற்றும் இன்றும் மட்டும் திரட்டிய பதிவுகள் இருக்கின்றன. WordPress போன்று ஏற்கெனவே முதிர்ச்சியடைந்திருக்கும் ஒரு மென்பொருளுடன் MagpieRSS போன்ற மென்பொருட்களை பொருத்துவதில் பல அனுகூலன்கள் இருக்கின்றன. தேடுதல், வகைப்படுத்துதல் போன்ற செயல்பாடுகள் WordPressஇன் உள்ளேயே அமைந்திருப்பதால் தனித்தன்மையுடைய வேறு பல செயல்பாடுகளை அறிமுகப்படுத்த நேரத்தை உபயோகிக்க முடியும்.

காசியே பல முறை சொல்லியிருப்பதை போன்று இனி வரும் காலத்தில் தமிழ் வலைப்பதிவுகளுக்காக தமிழ்மணம் போன்று வேறு பல சேவைகள் வரக்கூடும். ஆங்கிலத்தில் Technorati, Blogsnow போன்ற தளங்களை போன்று தமிழ் வலைப்பதிவுகளையும் வெவ்வேறு கண்ணோட்டத்தில் அனுக வகை செய்யும் தளங்கள் வர வேண்டும். எனது இந்த சோதனை கூட எவருக்கேனும் உத்வேகமாக அமைந்து ஒரு புதிய சேவை பிறக்கலாம்.

இந்த சோதனை தளம் இன்னும் ஒரு நாள் மட்டுமே செயல்பாட்டில் இருக்கும்.

Election 2005 | Weblogs


2005 தேர்தலுக்கான அறிவிப்பு வந்தாகி விட்டது. அறிவிப்பு வந்த உடனேயே தேர்தல் பிரச்சாரமும் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. வானொலி, தொலைக்காட்சி, தினசரி என்று அனைத்து ஊடகத்தினையும் தேர்தல் ஜுரம் பிடுத்துக் கொண்டிருக்கிறது.

அமெரிக்க தேர்தலில் வலைப்பதிவுகள் மிக முக்கிய வகித்தது (போன்ற தோற்றம் எழுந்தது) உண்மை. இங்கேயும் தேர்தல் அறிவிப்பு வெளியான சூட்டுடன் வலைப்பதிவுகள் களத்தில் குதிக்க தயாராகி விட்டன. பிபிஸி போன்ற முன்னனி செய்தி நிறுவனங்கள் கூட தங்கள் வலைப்பதிவுகளுடன் தேர்தல் அல்வா கிண்ட துவங்கி விட்டன.

யாஹூவும் களத்தில் உடனே குதித்திருக்கிறது. பிரதான கட்சிகள் மூன்றிலிருந்தும் ஒவ்வொரு பிரமுகர் எழுதவதற்கான டயரி பக்கங்களை தாங்கி நிற்கிறது யாஹூ. கூடவே வாசகர்களிடன் ஒரு கணிப்பு நடத்தி வருகிறது. தற்போதைய (மாலை, ஏப்ரல் 6) நிலவரம் தொழிலாளர் கட்சி தான் மீண்டும் வரும் என்று தெரிவிக்கிறது.Alastair Campbell போன்ற சில அரசியல்வாதிகளும் சொந்த வலைப்பதிவுகளுடன் கோதாவில் இறங்குகின்றனர். வரும் நாட்களில் மேலும் பல வலைப்பதிவுகள் தேர்தல் களத்தில் குதிக்கும் என்று எதிர்ப்பார்க்கிறேன்.

பரப்பரப்பான அடுத்த சில வாரங்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்.

Indians vulnerable to HIV/Aids

Indians vulnerable to HIV/Aids – BBC News

இது நாள் வரையில் நம்மவர்களுக்கு மேலை நாட்டவர்களை விட நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்று தான் நினைத்து வந்தேன். இன்னமும் நம்புகிறேன்.

எனது அலுவலக தோழி ஒருத்தி இந்தியாவினை பார்ப்பதற்கு தான் மிகவும் விரும்புவதாகவும் ஆனால் இந்தியாவிற்கு பயணம் செய்வதாயிருந்தால் அதற்கு முன் சில தடுப்பு ஊசிகள் போடவேண்டும் என்ற அச்சத்தினாலேயே இந்திய பயணத்தை ஒத்தி போட்டுக்கொண்டேயிருப்பதாக மாதத்திற்கு ஒரு முறையாவது புலம்புவாள்.

அப்போதேல்லாம் நான் “இந்தியர்களாகிய எங்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி மிக அதிகம். எந்த விதமான சூழ்நிலைக்கும் எங்களால் எளிதாக மாறிக்கொள்ள முடியும். உங்களைப் போல் எங்களுக்கு தேவையில்லாமல் தடுப்பூசிகள் தேவையில்லை” என்று சமாளிப்பது வழக்கம்.

All India Institute of Medical Sciences (AIIMS), HIV பரவுவதற்கு வழி செய்யும் ‘HLA-B*35-Px’ என்னும் மரபணு அதிகமாயிருப்பதாகவும் அதனை எதிர்த்து நிற்கும் ‘HLA-B*35-Py’ என்னும் மரபணு இந்தியர்களிடம் இரண்டரை மடங்கு குறைவாக இருப்பதாகவும் தனது ஆய்வுகளின் மூலம் கண்டறிந்திருப்பதாக அறிவித்துள்ளது. இது உண்மை என்றால் மேலை நாட்டவர்களை ஒப்பிடும் போது நம்மவர்களை எய்ட்ஸ் தாக்கும் அபாயம் மிக அதிகம் என்ற அதிர்ச்சியினை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மரபணு ஆராய்ச்சிகளை இன்னும் தீவிரமாக மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

Continue reading

Say Cheese :-)

Flower from pdphoto

உங்கள் பதிவுகளுக்கு பொருத்தமான படங்களை இணைப்பதற்காக தேடிக் கொண்டிருக்கிறீர்களா. நிறைய பேர் (நானும் தான்) கூகிள் இமேஜஸ் உபயோகித்து படங்களை திருட்டுத் தனமாய் தத்தெடுப்பது உண்டு.

இணையத்தில் உள்ள மிகப்பெரிய (அ)சௌகரியங்களில் இதுவும் ஒன்று. வேறு இன்னொருவருக்கு சொந்தமான படத்தை உரிமையுடன் எடுத்து உபயோகித்து விட்டு ஒரு acknowledgementஉம் disclaimerஉம் போட்டால் போதும். நேர்மையாய் இருப்பது போன்ற முகமூடி தயார்.

சமீபத்தில் யாஹூ Creative Commons உரிமத்தின் படி அமைந்த ஆக்கங்களை தேடுவதற்கு தனியாக ஒரு தேடல் பக்கத்தை அறிமுகப்படுத்தியிருப்பதை பார்த்திருப்பீர்கள். இதனை கொண்டு அடுத்தவரின் உரிமத்தை மீறாமல் “CTL+C” “CTL+V” செய்வதற்கு தேவையான ஆக்கங்களை கண்டுபிடிக்கலாம். (அங்கே போய் tamil என்ற வார்த்தை கொடுத்து தேடி பாருங்கள். இரண்டாம் இடத்தில் உங்கள் அபிமான… 🙂 )

சரி… தலைப்புக்கு வந்துடுறேன். எந்த விதமான ராயல்டி பிரச்சனையிலும் மாட்டிக் கொள்ளாமல் படங்களை சுடுவதற்கு சில தளங்கள் இதோ.

* http://www.morguefile.com/
* http://www.pixelperfectdigital.com/
* http://www.openphoto.net/
* http://www.imageafter.com/
* http://pdphoto.org/

மேலே இருக்கிற படம் pdphoto.orgயில் இருந்து உரிமையுடன் எடுத்தது.

உள்ளேன் ஐயா!

MK signs attendance register in Assembly

பள்ளிக்கூடத்துல (ப்ராக்ஸி) அட்டென்டென்ஸ் கொடுக்கிற மாதிரில்ல இருக்கு இது.

ரொம்ப நாளா லோக்கல் அரசியல் செய்திகளை பார்க்காமல் இருந்துட்டு இன்னைக்கு பார்த்த செய்தி கொஞ்சம் அதிர்ச்சியா தான் இருந்துச்சு. இதுக்கு முன்னாடி இந்தியாவின் எந்த சட்டமன்றத்திலாவது இது மாதிரி நடந்திருக்கா? யாராவது விசயம் தெரிஞ்சவங்க சொன்னா என்னோட மண்டை கொடச்சல் கொஞ்சம் நிக்கும். (ஹூம்.. இது என்ன டெஸ்ட் போட்டியில் 1000 ரன் அடிக்கிற மாதிரி ரெகார்டா? சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா நடத்த!) சும்மா கொஞ்சம் general knowdgeஐ வளர்த்துக்கலாமேன்னு தான்.

சட்டமன்றத்து போய் எதிர்த்தால உட்கார்ந்து விவாதங்களில் கலந்துக்கலைன்னா பதவியை ராஜினாமாவாது செய்திருக்கலாமே? என்னத்தை சொல்ல… 🙁

இன்னுமொரு விக்கி

தமிழ் மொழியில் ஏற்கெனவே சில விக்கிகள் இயங்கி வருவதை அறிந்திருப்பீர்கள். விக்கி என்பது ஒரு கட்டுப்பாடற்ற இணையதள வடிவம்.

விக்கி பற்றி அறிந்திராதவர்களுக்காக:

விக்கி என்பது பலர் சேர்ந்து உருவாக்கும் ஒரு இணைய தள வடிவம். விக்கி கொண்டு தகவல்களை பதித்து வைக்கும் போது ஒருவர் எழுதியதில் இருக்கும் பிழைகளை இன்னொருவர் திருத்துவதோ அல்லது அதனை மேம்படுத்துவதோ சாத்தியமாகிறது. மேலும் சிறு சிறு பதிவுகளாக கட்டப்படும் இத்தகைய தளங்கள் நாளடைவில் என்சைக்ளோபீடியோக்களை போல ஒரு குறிப்பிட்ட தலைப்பைப் பற்றிய அனைத்து தகவல்களையும் உள்ளடக்கியிருக்கும் நிலையை எட்டும் சாத்தியம் உள்ளது.

தமிழ் மொழியில் இயங்கும் சில விக்கிகள்:

  • தமிழ் லினக்ஸ் விக்கி
    தமிழில் லினக்ஸ் மற்றும் திறமூல செயலிகளைப் பயன்படுத்தவதை எளிதாக்க உருவாக்கப்பட்டுள்ள விக்கி. தமிழ்லினக்ஸ்.ஆர்க் தளத்தில் இயங்கும் இந்த விக்கியில் லினக்ஸ் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.
  • வலைப்பதிவர்களுக்கான விக்கி
    தமிழ் வலைப்பதிவர்களுக்காக இயங்கும் இந்த விக்கியில் வலைப்பதிவு தொழில்நுட்பங்களையும், வலைப்பதிவர்கள் சந்திக்கும் சவால்களையும் சேகரிக்கிறார்கள்.
  • விக்கிபீடியாவின் தமிழ் பக்கங்கள்
    விக்கிபீடியாவின் தமிழ் பகுதியில் அனைத்து தலைப்புகளின் கீழும் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. அன்மைக் காலங்களில் விக்கிபீடியா தளம் வேகப் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே தளம் பல நேரங்களில் மிக மெதுவாக இயங்கலாம்.

Continue reading

நரியுடன் ஓர் உலா – 2

ஒரு மென்பொருளை எப்படி நிறுவுவது என்று எழுதுவதற்கு சோம்பலாய் இருந்ததால் இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக படம் காட்டி விளக்க முயன்றிருக்கிறேன். இந்த விவரணப்படத்தை பார்ப்பதற்கு உங்களிடம் Flash plugin தேவைப்படும்.

சென்ற பதிவில் நமக்கு அறிமுகமான ஃபயர்ஃபாக்ஸ் உலாவியினை நம்முடைய கணினியில் நிறவும் முறையை இந்தப் படம் விளக்க முயற்சிக்கிறது..

கோப்பின் அளவைக் குறைக்க எவ்வளவோ முயன்றும் 1.3 MBயை விட சுருக்க முடியவில்லை. Dial-up உபயோகிப்பவர்கள் முறைத்துப் பார்ப்பது தெரிகிறது. Broadband வைத்திருப்பவர்களுக்கு சிரமம் இருக்காது என்று நினைக்கிறேன்.

அப்புறம்… படத்தில் ஒலிப்பதிவு ரொம்பவும் சுமாராகத் தான் வந்திருக்கிறது. அனைவருக்கும் பிடித்திருந்தால் அடுத்த பதிவில் இன்னும் கொஞ்சம் சிரத்தையுடன் குறைகளை நிவர்த்தி செய்ய முயற்சிக்கிறேன்.

Firefox Installation பற்றிய படத்தை பார்வையிட இங்கே சொடுக்குங்கள்.

நரியுடன் ஓர் உலா – 1

வலைப்பதிவோரும், வாசகர்களில் சிலரும் அவ்வப்போது மொசில்லா ஃபயர்ஃபாக்ஸ் உலாவியில் தமிழ் வலைத்தளங்களங்களையும், வலைப்பதிவுகளையும் பார்வையிடுவதில் உள்ள சிரமங்கள் பற்றி குரல் கொடுப்பதை பார்த்திருப்பீர்கள். ஆனால் நம்மில் சிலர் மொசில்லா குடும்ப உலாவிகளில் நமது தளங்களையும்/வலைப்பதிவுகளையும் தெரிய வைப்பதற்கு தேவையான மாற்றங்களை இன்னமும் செய்யாமலிருக்கிறோம். ‘ஃபயர்ஃபாக்ஸ்’ உபயோகிப்போரின் குரல் சிறுபான்மையினரின் குரலாக சபையில் எடுபடாமலிருப்பதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

சில புள்ளி விபரங்கள்

தலை பத்து உலாவிகள்

மூன்று மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட ஃபயர்ஃபாக்ஸ் உபயோகிப்போரின் சதவிகிதம் இப்போது கனிசமாக உயர்ந்திருக்கிறது என்பது சென்ற மாதத்தில் இந்த வலைப்பதிவிற்கு வருகை புரிந்தோரின் புள்ளி விபரத்தை ஆராய்ந்ததில் புரிந்தது.

Continue reading

The “Dirty Dozen”

Dirty Dozen

மின்னஞ்சல் எரிதங்கள் உதயமாகும் நாடுகளின் பட்டியலை Sophos வெளியிட்டுள்ளது. அதில் முதல் 12 இடங்களில் வரும் நாடுகள்.

1. United States – 42.11%
2. South Korea – 13.43%
3. China (incl Hong Kong) – 8.44%
4. Canada – 5.71%
5. Brazil – 3.34%
6. Japan – 2.57%
7. France – 1.37%
8. Spain – 1.18%
9. United Kingdom – 1.13%
10. Germany – 1.03%
11. Taiwan – 1.00%
12. Mexico – 0.89%
Others – 17.8%

Source: Sophos articles about spam: The “Dirty Dozen” 2004: Sophos reveals the top spamming countries