ஜர்னலிசத்தின் இன்னொரு பெயர் RSS

மெட்ரோ. இது இங்கிலாந்தின் பெரு நகரங்களில் இலவசமாக கிடைக்கும் ஒரு தினசரி. இதில் சென்ற வாரம் எரிதத்தை தடுப்பதற்காக (Spam filter) ஐபிஎம் (IBM) நிறுவனம் ஈடுபட்டிருக்கும் ஆராய்ச்சி பற்றி ஒரு செய்தி வெளிவந்திருந்தது. ஐபிஎம் உருவாக்கிவரும் ஒரு புதிய மென்பொருள் எரிதத்தை முழுவதுமாக தடுத்து நிறுத்தும் திறன் படைத்தது என்று அறிந்ததும் எனது ஆவல் அதிகரித்தது.

தினமும் எரிதத்துடன் போராடும் ஒரு சிஸ்டம்ஸ் அட்மினிஸ்ட்ரேட்டருக்கு (Systems Administrator) அதை விட வேறு எந்த செய்தியும் முக்கியமாக இருக்க முடியாது. இந்த மென்பொருள் பற்றி மேலும் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் கூகளில் தேடினால் தெளிவாக ஒன்றும் கிட்டவில்லை. அன்றைக்கு எனக்கு அலுவலகத்திலும் முக்கியமான வேலை ஒன்றும் இல்லை. இதை பற்றி முழுவுதுமாக தெரிந்த பின் தான் அடுத்த வேலை செய்ய முடியும் என்று தோன்றியது.

செய்தியை வெளியிட்ட நிறுவனத்திடமே கேட்டு விடுவோமே என்று மெட்ரோ பத்திரிக்கையை தொலைபேசியில் அழைத்தேன். "உங்கள் பத்திரிக்கையில் இன்று நீங்கள் வெளியிட்டுள்ள செய்தி பற்றி எனக்கு மேலும் சில விபரங்கள் வேண்டும். இந்த மென்பொருள் பற்றிய செய்தி உங்களுக்கு எப்படி கிடைத்தது என்று கூற முடியுமா" என்று கேட்டதற்கு ’15 நிமிடம்’, தொலைபேசி ‘4 பேரின்’ காதுகளுக்கு மாறிய பின் கிடைத்த பதில் "இது பிபிஸி யில் இருந்து எடுத்த செய்தி. இதை பற்றி எங்களுக்கு முழுமையாக தெரியாது" என்பது தான்.

சரி ‘பிபிஸி’க்கு பேசி பார்ப்போம். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்கலாம் என்று அவர்களை அழைத்தால் அவர்களின் பதில் "இந்த செய்தி நியூஸ்வயரில் இருந்து எங்களுக்கு கிடைத்தது" என்று வந்தது. இந்த இரண்டு நிறுவனங்களின் எடிட்டோரியலில் பணி செய்தவர்களிடமும் பேசியதில் 40 நிமிடம் கழிந்திருந்தது.

ஆகா இது என்னடா அனுமார் வால் கணக்கா முடிவேயில்லாம நீண்டுட்டிருக்கே. இது சரி பட்டு வராது. "இன்னும் கொஞ்சம் கூகளில் தேடினால் கிட்டிவிடும். அப்படியும் கதைக்கு ஆகவில்லையென்றால் IBMக்கே ஃபோன் போட்டு பேசிக்கலம்" என்று அந்த துப்பறியும் சாம்பு வேலையை அதோடு விட்டு விட்டேன். அப்புறம் அடுத்த சில நிமிடங்களில் IBM தளத்திலேயே அந்த செய்தியின் மூலத்தை கண்டுபிடித்து விட்டேன்.

நேற்று ஒரு நண்பனுடன் பேசிக்கொண்டிருந்த போது தான் அந்த விஷயம் புலனானது. அவன் ஏற்கெனவே ஒரு பிரபல தினசரி பத்திரிக்கையில் வேலை பார்த்திருக்கிறான். நிருபர்கள் செய்தி சேகரிக்கும் முறைகள் பற்றி அவன் சொன்னதன் சாரம்சாம் "இன்றைக்கு ஜர்னலிசத்தின் இன்னொரு பெயர் RSS". பல நேரங்களில் ‘செய்தி உண்மையா’, ‘அதன் மூலம் என்ன?’ என்றெல்லாம் ஆராய்ந்து வெளியிடுகிறார்களா என்று தெரியவில்லை.

Newswireஇல் வந்த செய்தி என்று BBCயும், BBCயில் வந்த செய்தி என்று Metroவும் மூலத்தை ஆராயாமல் ஒரு பொய்யான செய்தியை வெளியிட்டு விட்டால் விபரீதமாகி விடாதா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *