கோடையின் கடைசி குதூகலம்

இந்த வாரம் இலண்டனின் மிகப்பெரிய வருடாந்திர திருவிழாவான ‘நாட்டிங் ஹில் கார்னிவல்’ நடைபெறுகிறுது. ரியோடி ஜெனரோவின் கார்னிவலுக்கு அடுத்த படியாக உலகின் இரண்டாவது பெரிய கார்ணிவல் இந்த நாட்டிங் ஹில் கார்னிவல் (Notting Hill Carnival) தான்.

நமது தேர் திருவிழா போல கார்னிவல் நாட்களில் நகரமே களை கட்டிவிடும். மக்கள் விதவிதமான ஆடை அலங்காரங்களில் தெருக்களுக்கு வந்து ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடுவார்கள். ஒவ்வொரு வருடமும் அகஸ்து மாதத்தின் கடைசி வாரயிறுதியில் நடைபெறும் இந்த திருவிழா கடந்த 40 வருடங்களாக வெற்றிகரமாக தொடர்ந்து வருவதற்கு முக்கிய காரணம், கோடையின் இறுதி திருவிழா இது.

சங்க இலக்கியம் தொட்டு தற்கால திரைப்பட பாடல்கள் வரை நிலவையும், இரவையும், மழையையும் பாடாத கவிஞரே கிடையாது. இரவு, நிலவு, மழை என்று குளிர்ச்சியான விஷயங்களை நாம் போற்றுவதற்கு ஒரு முக்கியக் காரணம் நமது தட்ப வெட்ப நிலை தான். வருடம் முழுவதும் கதிரவனின் வெப்பத்தில் உழலும் நமக்கு மழை எப்போதுமே மகிழ்சி தரும் நிகழ்ச்சி தான்.

ஆனால் மேலை நாடுகளில் எல்லாமே தலைகீழ். பெரும்பாலான வருடமும் குளிரில் வாடுபவர்களுக்கு கோடைகாலம் தான் குதூகலமே. கதிரவனை போற்றி தான் இவர்களது இலக்கியங்களும். கோடை வந்தாலே கொண்டாட்டம் தான்.

கோடையை மேலும் மகிழ்வானதாக்குவதற்கு இலண்டன் வாசிகளுக்கு வேறு பல கொண்டாட்டங்கள் இருந்தாலும், கோடை முடிவதற்கு முன் இறுதியாக வரும் இந்த நாட்டிங் ஹில் கார்னிவலில் கோடையின் கடைசி வெயிலை அனுபவிக்க கிடைத்த வாய்ப்பாகவே அனைவரும் கருதுகின்றனர்.

அதே நேரத்தில் இது போன்ற கார்னிவல்கள் தொடங்கிய வரலாறு சுவாரசியமானது.

வரலாறு

கார்னிவல் ட்ரினிடாடில் (மேற்கிந்திய தீவுகள்) கறுப்பர்கள் அடிமைகளாக வாழ்ந்த காலம். 19ஆம் நூற்றாண்டு. அடிமைகள் தங்கள் கவலைகளை மறப்பதற்காக ஆடுவதோ, பாடுவதோ கூட தடை செய்யப்பட்டது. அது தவிர அவர்கள் அழகாக (பகட்டாக) உடை உடுத்துவதும் கூடாது. ஒவ்வொரு வருடமும் ஈஸ்டர் பண்டிகைக்கு முன்பாக ஐரோப்பியர்கள் கொண்டாடும் கார்ணிவல் என்னும் திருவிழாவை அப்பொது தான் மேற்கிந்திய தீவுகளில் அறிமுகப்படுத்தினார்கள்.

கார்னிவல்_2 இந்த திருவிழா காலத்தில் மட்டும் தங்கள் எஜமானர்களை மகிழ்விப்பதற்காக அடிமைகள் அழகாக உடை உடுத்தி, இசை கருவிகள் இசைத்து, பாட்டு பாடி, நடனம் ஆடலாம். ஆனால் இந்த கேளிக்கைகளின் போதும் அவர்கள் எஜமானர்களுக்கு பிடித்த மாதிரியே நடக்க வேண்டும். எஜமானர்களுக்கு பிடிக்காத இசை வடிவங்களுக்கோ நடனத்திற்கோ தடா தான். மாலை நேரத்திற்கு பின் அடிமைகள் தெருக்களில் நடந்து செல்வது கூட தடை செய்யப்பட்டது.

இந்தக் கால கட்டத்தில் தான் 1883இல் இந்த சட்டங்கள் தளர்த்த பட்டது. தங்களுக்கு விடுதலை கிடைத்ததும் அடிமைகளாயிருந்தவர்கள் செய்த முதல் காரியம் ‘தெருக்களில் கூடி தங்கள் பாரம்பரிய இசையினை இசைத்து, பாடியும் ஆடியும் மகிழ்ந்தது தான். அவர்களது பாரம்பரிய உடைகளுடன், தங்களை அடக்கி வைத்திருந்த தங்களது எஜமாணர்களை போன்று உடை அணிந்தும், அவர்களை போன்ற முகமூடிகள் அணிந்தும் அவர்களை கிண்டல் செய்தனர். இது தான் இன்றைய கார்னிவல்களின் தொடக்கம் என்று கூறலாம்.

அதற்கு பின் இது போன்ற பல நாடுகளில் பிரபலமடைதாலும் இன்றும் அதன் அடிப்படைகள் – கண்ணைக் கவரும் உடைகள், இசை, மற்றும் நடனம் தான்.

கார்னிவல்-3 இலண்டனில் இந்த ‘நாட்டிங்க் ஹில்’ கார்னிவல் தொடங்க காரணமாயிருந்தது கரீபியன் தீவுகளில் இருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள் தான். 40 வருடங்களுக்கு முன் நாட்டிங் ஹில்’லில் வாழ்ந்தவர்களுக்கு பல சோதனைகள். வேலையில்லா திண்டாட்டம் முன்னேப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்திருந்தது. அது போதாதென்று இன தகராறுகள் வேறு. மக்கிளிடையே நல்லிணக்கத்தை வளர்க்கும் வண்ணம் 1964இல் இந்த கார்னிவல் முதல் முறையாக நடத்தப் பட்டது.

நேற்று கார்னிவலில் குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் வருபர்களுக்கான தினம். கொஞ்சம் மேக மூட்டமாக இருந்ததுடன் தூவானமாகவும் இருந்ததால் கார்னிவலுக்கு போகலமா இல்லை நாளை போகலாமா என்று குழப்பம். நாளை மழை பெய்தால் அப்புறம் இரண்டு நாட்களும் பார்க்க முடியாமல் போய்விடுமே என்ற நினைத்து கிளம்பிவிட்டேன்.

அங்கே சென்று பார்த்த பின் புரிந்தது வீட்டுக்குளேயே முடங்கி கிடந்திருந்தால் அற்புதமான ஒரு திருவிழாவினை காணும் வாய்ப்பினை இழந்திருப்பேன் என்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *