நரியுடன் ஓர் உலா – 1

வலைப்பதிவோரும், வாசகர்களில் சிலரும் அவ்வப்போது மொசில்லா ஃபயர்ஃபாக்ஸ் உலாவியில் தமிழ் வலைத்தளங்களங்களையும், வலைப்பதிவுகளையும் பார்வையிடுவதில் உள்ள சிரமங்கள் பற்றி குரல் கொடுப்பதை பார்த்திருப்பீர்கள். ஆனால் நம்மில் சிலர் மொசில்லா குடும்ப உலாவிகளில் நமது தளங்களையும்/வலைப்பதிவுகளையும் தெரிய வைப்பதற்கு தேவையான மாற்றங்களை இன்னமும் செய்யாமலிருக்கிறோம். ‘ஃபயர்ஃபாக்ஸ்’ உபயோகிப்போரின் குரல் சிறுபான்மையினரின் குரலாக சபையில் எடுபடாமலிருப்பதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

சில புள்ளி விபரங்கள்

தலை பத்து உலாவிகள்

மூன்று மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட ஃபயர்ஃபாக்ஸ் உபயோகிப்போரின் சதவிகிதம் இப்போது கனிசமாக உயர்ந்திருக்கிறது என்பது சென்ற மாதத்தில் இந்த வலைப்பதிவிற்கு வருகை புரிந்தோரின் புள்ளி விபரத்தை ஆராய்ந்ததில் புரிந்தது.

தமிழ்மணத்திற்கு வருபவர்களை ஆராய்ந்து காசியும் இது போன்ற ஒரு புள்ளிவிபரத்தை வெளியிட்டிருந்தார்.

சென்ற மாத கணக்கின் படி ஃப்யர்ஃபாக்ஸ் உபயோகிப்போர் 36.2%. இதில் நான் பார்வையிட்ட கணக்காக 10 சதவிகிதத்தை கழித்தாலும் குறைந்தது 25% பேராவது ஃபயர்ஃபாக்ஸ் உபயோகிக்கிறார்கள். இது மிகவும் ஆரோக்யமான விசயம்.

ஆனால் இன்னமும் பலர் மொசில்லா, ஃபயர்ஃபாக்ஸ் போன்ற சொற்களை கேட்டாலே இலத்தீன் மொழியில் எதையோ கேட்டது போல விழிக்கிறார்கள். தமிழ் இணையத்திற்கு வெளியிலுள்ள எனது நண்பர்கள், உடன் வேலை செய்பவர்கள் என்று நான் அறிந்த பலரும் இதில் அடக்கம்.

ஃப்யர்ஃபாக்ஸ்!? அப்படின்னா?

“ஃபயர்ஃபாக்ஸ் உலாவி என்பது என்ன? நமது கணினியில் இதனை நிறுவுவது எப்படி ? இதனால் கிடைக்கும் அனுகூலன்கள் என்னென்ன? எப்படி பாவிப்பது?” போன்ற கேள்விகளுக்கு விடையளிப்பது தான் இந்த கட்டுரையின் நோக்கம்.

“இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரரை விட ஃபயர்ஃபாக்ஸ் சிறந்த உலாவியா? சிறந்தது என்றால் எவ்வளவு? எப்படி?” போன்ற தொழில்நுட்ப விடயங்களை சொல்லி உங்களை குழப்பாமல் இப்போதைக்கு கூகிள் தேடலில் கிடைக்கும் சில முடிவுகளை மட்டும் எடுத்துக் காட்டுகிறேன்.

கூகிளில் சில சொற்றொடர்களை கொடுத்து தேடிய போது கிடைத்த பொருத்தங்கள்:

தேடல்களின் முடிவுகளை வைத்துக் கொண்டு எது சிறந்தது என்ற முடிவுக்கு வரும் உரிமையை உங்களிடம் விட்டு விடுகிறேன்.

அழகிய நிலாக்காலம்

தொடக்க காலத்திலிருந்தே இணையத்தில் உலாவிக் கொண்டிருப்பவர்கள் ‘நெட்ஸ்கேப்’ என்ற உலாவியினை அறிந்திருப்பார்கள். கட்டாயம் உபயோகித்திருப்பார்கள். 94-95 வரை நெட்ஸ்கேப் தான் இணைய உலகின் குடிமக்களின் முதன்மையான தேர்வாக தேர்வாக இருந்தது.

வந்ததே இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர்

அப்படியென்றால் நாம் அனைவரும் செல்லமாக IE என்றழைக்கப்படும் ‘இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு‘ மாறியது எப்படி? இதற்கு முக்கிய காரணம் மைக்ரோஸாஃப்ட் ‘விண்டோஸ் 95’விலிருந்து தான் வெளியிட்ட அனைத்து இயக்கு தளங்களுடன் உள்ளமைந்த உலாவியாக இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரரையும் இணைத்து வெளியிட்டது தான்.

கணினி வாங்கும் போதே உலாவியும் கிடைக்கையில் வேறொரு உலாவியை தேடி நிறுவும் நேரமும், தேவையும் பெரும்பாலானோருக்கு இல்லாமல் போனது நெட்ஸ்கேப்பின் சரிவிற்கு முக்கிமான காரணம். IE உபயோகிப்போர் அதிகமாக அதிகமாக இடைப்பட்ட காலத்தில் உருவான பெரும்பாலான இணையதளங்களும் IE உலாவியினை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு அதற்காகவே பிரத்யோகமாக தயாரிக்க பட்டன.

கூடவே இதனை சந்தர்ப்பமாக எடுத்துக் கொண்டு IEயின் பாதுகாப்பில் இருக்கும் பொத்தல்களை உபயோகித்து எப்படி பயனர்களின் கணினியை தாக்கலாம் என்ற புதிய போர் சாஸ்திரமும் உருவானது. விளைவு? இன்று IE கொண்டு இணையத்தில் உலா வருவது என்பதே மிகவும் ஆபத்தான விடயமாகிப் போனது.

மொசில்லா கட்டமைப்பு

உபயோகிப்போர் எவரும் இன்றி தனது கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருந்த நெட்ஸ்கேப்பினை AOL நிறுவனம் கையகப்படுத்திய சில காலம் கழித்து நெட்ஸ்கேப்பின் சாம்பலில் இருந்து உயிர்த்தெழுந்த ஃபீனிக்ஸ் பறவை தான் மெசில்லா கட்டமைப்பு (Mozilla Foundation). இந்த மொசில்லா கட்டமைப்பில் உருவாகி வெளி வந்திருக்கும் புதிய மென்பொருள் தான் நாம் பேசிக்கொண்டிருக்கும் ஃபயர்ஃபாக்ஸ் உலாவி.

மொசில்லாவின் நெருப்புநரி சின்னம்

மேலே நீங்கள் பார்ப்பது ஃப்யர்பாக்ஸின் சின்னம். “உலகத்தையே விழுங்கப் போவது போல கவ்விப் பிடித்திருக்கும் செந்நிற நரி. அதுவும் தீப்பற்றி எரிவது போல் தெரிகிறது. பார்த்தாலே பயம் வருகிறதே?” என்கிறீர்களா. மொசில்லாவின் பழைய சின்னமான கோட்ஸில்லாவினை பாருங்கள். பயம் போய்விடும்.

எனக்கென்னவோ ஃபயர்ஃபாக்ஸ் உலாவியினை போலவே அதன் சின்னமும் மிகவும் அழகாக வடிவமைத்திருப்பதாய் தோன்றுகிறது. உபயோகித்து பார்த்த பின் நீங்களும் என்னுடன் உடன் படுவீர்கள்.

அடுத்த இடுகையில் உலா தொடரும்…

8 thoughts on “நரியுடன் ஓர் உலா – 1”

  1. ‘இனிப்பு அதிகம் இருக்கும் இடத்தில்தான் ஈ இருக்கும்’ என்பது மாதிரி ஃபயர்பாக்ஸிடம் ஓட்டைகள் இல்லாததற்கு காரணமாக சொகிறார்கள் 😉

    எது எப்படியோ… வின்32 வரமால் உலா வர நெருப்புநரி பெரிதும் உதவுகிறது.

  2. நவன்,

    நெட்ஸ்கேப் எப்படி மொசில்லாவாக மாறியது என்றும், வியாபார விஷயங்கள் எப்படி நிகழ்கிறதென்றும், தற்போது கூகிளுடன் சேரும் முயற்சிகளின் பின்னணி என்ன என்றும் அறிய ஆசை.

    நான் மொசில்லாவை பரவலாக்க பல காரணங்களால் விரும்பினாலும்.
    நண்பர்களை, வீட்டுப்பாவனைக்கு அதனை பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரித்ய்திருக்கிறேன்.

    ஏனென்றால், அதனை பயன்படுத்தினால், தமிழில் பெயர்வைக்கப்பட்ட , சேமிக்கப்பட்ட வலைப்பக்கங்களை திறந்துபார்க்க முடியாது (தமிழாவிலும் இதே நிலைதான்)
    நண்பர்கள் இதற்கென்றே கோப்புக்களுக்கு தங்லிசில் பெயர்வைத்து சேமிப்பார்கள். இது எனக்கு பாரதூரமான பிழையாகப் படுகிறது.

    மற்றது. eot பிரச்சனை. இதில் நான் மொசில்லாவின் பக்கம்தான். மூடிய தொழிநுட்பங்களுக்கு எப்போதும் என் ஆதரவு இல்லை.

    இன்னுமொரு விஷயம், வலைக்குறிப்புக்களில் பல மொசில்லாவில் குழப்பமாய் தெரிவது எமது பிழையா, மொசில்லாவின் பிழையா, அல்லது யுனிகோடின் பிழையா?

    நியம உலாவியாக, எமது வலைப்பக்கத்தை எடைபோடுவதற்கு, வடிவமைப்பதற்கென w3 நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்ட உலாவி எது?

  3. தங்கமணி: உங்கள் மறுமொழிக்கு நன்றி. சீக்கிரமே அடுத்த பதிவையும் போட்டு விடுகிறேன். பார்த்து விட்டு சொல்லுங்கள்.

    பாலா: நல்ல விசயங்கள் எப்பவுமே கசப்பா இருக்கிறது இல்லையா? 🙂

    மயூரன்: இப்போதைக்கு மொசில்லா உபயோகிக்கும் போது தமிழில் பெயர்களை கொடுக்க முடியாது என்பது உண்மை தான். ஆனால் இந்த ஒரு காரணத்திற்காகவே மொசில்லாவை உபயோகிக்காமல் இருக்க வேண்டாம்.

    வேறு வழியில்லாத நேரங்களில் ஆங்கிலம் வாசிக்க *தெரிந்தவர்கள்* தங்கலீசில் பெயர் வைப்பது ஒன்றும் தவறில்லை. தாய்மொழிக்கு கொஞ்சம் தூரமாக பட்ட போதும். முழுக்க தமிழ் மட்டுமே கொண்டு இயங்கும் கணினிகள் வெகு சீக்கிரமே நமக்கு கிடைக்கும் அப்போது இது போன்ற இடர்பாடுகள் இருக்காது.

    ஆங்கிலம் வாசிக்க தெரியாதவர்கள் கூட கணினியை (குறிப்பாக இணையத்தை) உபயோகிக்கக் கூடிய நிலையை நாம் இன்னமும் எட்ட வில்லை. தமிழில் domain nameகளை பாவிப்பதற்கு சில முயற்சிகள் நடந்து வந்தாலும் இப்போதைக்கு ஆங்கிலத்தில் தான் இணையதளங்களின் பெயர்கள்களை தட்டச்ச வேண்டியிருக்கிறது.

    உங்கள் மற்ற கேள்விகளுக்கு வரும் பதிவுகளில் விடையளிக்க முயற்சிக்கிறேன்.

  4. அப்படியே யுனிகோடு (UTF-8) தமிழ் எழுத்துக்கள் ஃபயர்ஃபாக்ஸில் உடைவது அவர்களுக்குத் தெரியுமா, எங்கே சொன்னால் சரி செய்வார்கள், யாரவாது சொல்லியிருக்கிறார்களா, சொல்லாவிட்டால் தமிழ் வலைப்பதிவர்கள் சார்பாக நீங்கள் இந்த விண்ணப்பத்தை முன்னெடுத்துச் செல்லமுடியுமா?
    (உஸ்ஸ்ஸ் அப்பாடா…போட்டுத்தாக்கியாச்சு:-))

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *